ALL VIDEO ஆன்மீகம் NEWS
வைகாசி விசாகம்
June 1, 2020 • Dharmalingam • ஆன்மீகம்

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று.

இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால்   குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

வைகாசி விசாகம் புராண கதை                                                                                     

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது

பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார். அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன.

அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் மீன்களாக மாறக்கடவது என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர்.

வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

வழிபடும் கோவில்கள்

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வந்து  வழிபடுவார்கள் திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் காப்பு கட்டுதலில் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்பார்கள்.

மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்காவடி, பன்னீர் காவடி, பறவைக்காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் வைகாசி விசாகத் திருவிழாவைக் காண்பதற்கு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பல்வேறு காவடிகளை சுமந்தும் பால் குடங்களை எடுத்துக்கொண்டும் பாதயாத்திரையாக வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு.  அன்றைய நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் வருவதுண்டு.

 

வைகாசி விசாகம்  2  தொடரும்

பக்தியுடன் மோகனா செல்வராஜ்