ALL ஆன்மீகம் NEWS VIDEO
வைகாசி விசாகம் - 04.06.2020 (நிறைவு)
June 2, 2020 • Dharmalingam

 

வைகாசி விசாகம்  வழிபடும் முறை  (04.06.2020)

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது.

ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது.

விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன.  ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும்.

மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.

மேஷம் விருச்சிகம்  ராசி அன்பர்கள்,  விசாகம் நட்சத்திரம்  அன்பர்கள், விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால்  தனுசு,  மீனம் ராசி  அன்பர்கள் ஆக அனைவரும் வைகாசி விசாகம் தினத்தன்று கந்த சஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

ஆக சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு வைகாசி விசாகம் விரதம் சிறப்பு

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

பக்தியுடன் மோகனா செல்வராஜ்