ALL VIDEO ஆன்மீகம் NEWS
ம. பொ. சிவஞானம் -ஒரு வரலாறு -இளையோருக்கு நினைவூட்டல் இன்று.
June 26, 2020 • Dharmalingam

 

ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995)

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார்.

இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார்.

எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது.

1945 ஆம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார்.

சுதந்திர இந்தியாவில், சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகைய சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு என தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் தமிழர் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.

'தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும், தமிழ் மொழியை தாய்மொழியாகவும் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர். தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள் தமிழ்நாடாகக் கொள்ளப்படும்' என்றும், தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறி 1946ஆம் ஆண்டில், தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தவர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆவார். 

மொழிவழியாக உருவாகும் தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட வேண்டிய பகுதிகளாக ஐயா ம.பொ.சி. வரையறை செய்த தமிழர் பகுதிகளாவன:

மலையாளிகளின் ஆதிக்க திருவிதாங்கூர் அரசில் இருந்த தமிழர் மிகுதியாக வாழ்ந்து வந்த தென்பகுதி வட்டங்கள்;

கன்னட ஆதிக்க மைசூர் அரசில் இருந்த கோலார் தங்கவயல் பகுதி;

பிரெஞ்சுப் பேரரசின் பிடியில் இருந்த பாண்டிச்சேரி - காரைக்கால்;

திருப்பதி மலைக்குத் தெற்கேயுள்ள சித்தூர் மாவட்டத் தமிழ்ப் பகுதிகள்;

புதுக்கோட்டை மன்னராட்சிப் பகுதி; தமிழீழத்தின் யாழ்ப்பாணப் பகுதி

ஆகிய தமிழர் தாயக நிலங்களை உள்ளடக்கியதாகும். 

தமிழரசுக் கழகம் (Tamil Arasu Kazhagam) ம. பொ. சிவஞானம் என்பவரால் 1946, நவம்பர் 21 அன்று சென்னையில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய அமைப்பாகும். 'தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும். சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் உரிமை தமிழருக்கு உண்டு' என்பது தமிழரசு கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது.

திரு. ம.பொ.சிவஞானம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தலைவர் முகவுரையில், தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை முதலிய பிரதேசங்களில் தமிழர் படும் அல்லல்களையும், அவர்கள் விஷயத்தில் தமிழ் நாட்டவர் கொள்ளவேண்டிய அக்கறையையும் அவசியத்தையும் விவரித்துக் கூறினார்.

மேலும், பிரிட்டிஷ் மந்திரி சபையின் திட்டத்தின்படி தமிழ்நாடு ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துக்காட்டினார்.

நெடுநேர ஆலோசனைக்குப்பிறகு “தமிழரசுக்கழகம் “ என்ற பெயருடன் ஒரு கழகம் நிறுவப்பட்டது. “  என்று செய்திக்குறிப்பு வெளியிட்டார்.

ஆகஸ்ட் 8, 1954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.

1956ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். 

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார்.

திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்; அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது.

குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்கப் போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

பாரதியின் எழுத்துக்கள் மூலம் ம. பொ. சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம. பொ. சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியை பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:

சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. யைச் சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார். ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டம் பெற்றார்.

1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சி. யின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க , டாக்டர். மு.வரதராசனார் தலைமை வகித்தார்.

பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி. எதிர்பார்த்ததைப் போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது.

அதற்கடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி. தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர்.

வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறியச் செய்தவர் ம.பொ.சி. வ.உ.சி. யின் வரலாற்றைப் பற்றி, ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது.

இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி., 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலைத் தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும், டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும், சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற அவைகளும், தமிழ் நாடு சட்டமன்ற கீழவை/மேலவை என்று வழங்கப்பட்டன.
 
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை வழிநடத்தும் அலுவலர் ஆவார் ம.பொ.சி. 1976 முதல்1986  வரை சட்டப் பேரவைத் தலைவர்  ஆக பணியாற்றினார் .மேலவை 1986 இல் நீக்கப்பட்டது

ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலைத் தழுவி பி.ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்

திருவள்ளுவர் இராமலிங்க அடிகள்  பற்றி ம.பொ.சி.பல  நூல்களை எழுதியுள்ளார்.

ம.பொ.சி  எழுதிய ஆங்கில நூல்கள்  சில  :  The Great Patriot V.O. Chidambaram Pillai  The First Patriot Veera Pandia Katta Bomman and   The Universal Vision of Saint Ramalinga

இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

சிலம்புச் செல்வர்' என்ற விருது, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது. சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு 'டாக்டர்' பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன.

மதுரைப் பல்கலைக் கழகம், 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.
மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.

சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது

வணக்கம்   நன்றி 

தொகுப்பு  மோகனா  செல்வராஜ்