ALL VIDEO NEWS ஆன்மீகம்
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தமிழகம் முதன்மை
August 12, 2020 • Dharmalingam

நாடு முழுக்க உள்ள பெண்களுக்கு  ஒரு நல்ல நாள். இந்து வாரிசு (திருத்தம்) சட்டம், 2005ன் கீழ், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என்பதோடு, பெண்ணின் தந்தை, அந்த காலகட்டத்தில் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த சட்டத்தின்கீழ், சொத்துரிமை கொடுக்கப்பட்டே தீர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தம், திருத்தமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

"பெண்களுக்கு சொத்தில் சம பங்கு" என்பது பெரியார் காலத்து கோஷம். 1929ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி, 'பெண்களுக்கு சொத்தில் சம உரிமை' வழங்க வேண்டுமென தந்தை பெரியார் செங்கல்பட்டு மாநாட்டில் புரட்சிகர தீர்மானம் கொண்டு வந்தார்.

அந்த காலகட்டத்தில் இதெல்லாம், நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். பெண்களை சக உயிராக மதிக்கும் பக்குவம் அப்போது பெரும்பான்மை சமூகத்திற்கு துளி கூட கிடையாது. பெரும்பான்மையை பற்றி கவலைப்படாமல், சம உரிமை பற்றி கவலைப்பட்டதால்தான் பெரியாரால் இப்படி ஒரு கோஷத்தை அப்போதே முன் வைக்க முடிந்தது.

பிறந்த வீட்டில் பாகுபாடு

அப்போதைய சூழலில் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், ஏறத்தாழ, பிறந்த குடும்பத்திலிருந்து அனைத்து உரிமைகளும் ரத்தாகிவிடும் நிலையில்தான் பெண்கள் இருந்தனர். திருமணத்திற்கு முன்பும் கூட, ஆண்களுக்கு பிறகுதான் பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பது உட்பட பல பாகுபாடுகள் காட்டப்பட்டன. கல்விக் கூடங்களுக்கு அனுப்பவும் மறுத்தனர்.

கணவர் வீட்டுக்கு சென்றபிறகும் பாகுபாடு அப்படியேத்தான் இருந்தது. ஒருவேளை கணவரை இழந்துவிட்டால், மறு மணத்திற்கு வாய்ப்பு கிடையாது, சில பகுதிகளில் உடன் கட்டை ஏறி அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் இருந்தது.

அப்படியான ஒரு சூழலில்தான் பெரியார், பெண்களுக்கு பெற்றோர் குடும்ப சொத்தில் சம உரிமை என்று சொன்னார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மொத்த நாடுமே, செங்கல்பட்டு தீர்மானத்தையடுத்து தமிழகத்தை திரும்பி பார்த்தது.

கருணாநிதி இயற்றிய சட்டம் (1989) 

ஆனால், பெரியார் கொள்கை வழியில் வந்தவரான கருணாநிதி, இந்த தீர்மானம் நிறைவேறிய, 60 ஆண்டுகள் கழிந்து 1989ல் பெரியாரின் கனவை நனவாக்கி "பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு" என சட்டமாக்கினார்.

இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989ன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. நாட்டிலேயே முதல் முறையாக புரட்சிகரமாக இந்த திட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வந்தது. பெரியாரின் கனவை, நனவாக்கிய பெருமையை பெற்றார் கருணாநிதி.

இதை ஏற்றுக்கொண்டு, 'ஜீரணித்துக்கொண்டு,' அதை செயல்படுத்தும் மனது வருவதற்கு மொத்த நாட்டுக்குமே பல வருடங்கள் தேவைப்பட்டன. எனவேதான், இந்திய சொத்துரிமைச் சட்டம் 1956இல் திருத்தங்கள் 2005ல் கொண்டுவரப்பட்டன.

அதாவது, தமிழகம் சட்டம் இயற்றிய சுமார் 16 வருடங்கள் கழித்துதான், தேசிய அளவில் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழகம் முதன்மை

இப்போது மத்திய அசின் சட்டத்தை எதிர்த்துத்தான் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர், 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச். ஒரு பெண் எப்போதும் அந்த வீட்டின் செல்ல மகள்தான் என்று கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட். மாற்றம் ஒன்றே மாறாதது.

இந்த மாற்றத்தை வட இந்தியாவும் வருங்காலத்தில் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே-1989ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை கலைஞர் உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை திமுகவின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்

ஆனால், அதற்கான முதல் குரல் தமிழகத்திலிருந்துதான் எழுந்தது என்பதையும், முதல் முயற்சியும் தமிழகத்தினுடையதுதான் என்பதையும், காலம் தனது பொன் எழுத்துக்களால் பொறித்துக்கொள்ளும்.

இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.