ALL VIDEO ஆன்மீகம் NEWS
புரட்டாசி பெளர்ணமி 01/10/2020
October 1, 2020 • Dharmalingam

பொன்னுருக காயும் மன்னுருக பெய்யும்” என்று சொல்வார்கள். அதாவது புரட்டாசி மாதத்தில், பகல் நேரத்து வெய்யில் தங்கத்தை உருக செய்துவிடுமாம்.அந்தளவு கண்ணாடி போல தகதகவென்று வெயில் சுட்டெரிக்கும்.

பங்குனி, சித்திரையில் கூட வருகின்ற வெயில் நேரடியாக வெப்பத்தை கொடுத்து நான் மிகவும் மூர்க்கமானவன் என்று தயவு தாட்சண்யம் தன்னை வெளிப்படுத்தி கொள்ளும்.

புரட்டாசி மாதத்து வெயில் அப்படி அல்ல. வைக்கல் போருக்குள் பதுங்கி இருந்து முயலை பிடிக்கின்ற வேட்டை நாய் போல தன்னை குளிர்ச்சியானவன் என்று காட்டிக்கொண்டே நமது உடம்பில் உள்ள வியர்வையை சொட்ட வைத்து காய வைத்து விடும்.

இப்படி பகல் நேரத்தில் தகிக்கின்ற வெய்யில் இரவு நேரத்தில் இருந்ததற்கான அடையாளமே தெரியாது. மழை கொட்டும் அதுவும் சாதாரண மழை அல்ல வானத்தின் வயிறாய் கிழித்துக்கொண்டு பாதாளத்தையும் பிளந்துவிடுவேன் என்று ஆக்ரோஷத்தோடு பாயும். பெருமழை இந்த மலையின் வேகத்தில் எந்த நெருப்பிலும் உருகாத மண் தானாக உருகிவிடும். இது தான் இந்த பழமொழியின் நேரடியான பொருள்.

புரட்டாசி மாதத்து முழு நிலவு தினமான பெளர்ணமி, அன்னை பார்வதி மகாதேவரான சிவபெருமானை நாயகனாக பெறுவதற்கு இன்றைய பெளர்ணமி தினத்தில் விரதம் இருந்தாளாம்.

அதனால் தான் அன்று உமா மகேஷ்வர விரதம் என்று ஒன்று அனுசரிக்கப்படுகிறது.

மாதந்தோறும் வரக்கூடிய பெளர்ணமி என்பது அம்பாளை ஆராதிக்கக் கூடிய நாள். பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உரிய நாள். குலதெய்வத்தை வணங்கவேண்டிய நாள். இதில் அமாவாசையில் முன்னோர் வழிபாடு போல, பெளர்ணமியில் பெண் தெய்வங்களை, அம்பாளை வணங்கி வழிபடவேண்டியது மிக மிக அவசியம்.

பெளர்ணமியில் காலையும் மாலையும் வாசலில் கோலமிட வேண்டும். வாசலில் விளக்கு ஏற்றிவைக்கவேண்டும். பூஜையறையில் கோலமிட்டு, விளக்கேற்றி வைத்து, அம்பாள் படங்களுக்கு செந்நிற மலர்கள் கொண்டு அலங்கரிக்கவேண்டும்.

பெளர்ணமி என்பது முழு நிலவு தோன்றும் அற்புதமான நாள். பெளர்ணமி என்பது சந்திரன். சந்திரன் என்பவன் மனோகாரகன். நம் மனதை ஆளுபவன். ஆகவே பெளர்ணமியில் வழிபடுவது என்பது மனதில் உள்ள குழப்பங்களைப் போக்கவல்லது. மனதில் தெளிவைக் கொடுக்கக்கூடியது.

இந்த விரதத்தை புரட்டாசி பெளர்ணமி அன்று செய்வதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும் என்பது ஒருபுறம் இருந்தாலும், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு இந்த முழுநிலவு தினத்தில் அம்மையப்பனை வழிபட்டால் கண்டிப்பாக கடன் என்ற கடலிலிருந்து கரை சேர்க்கப்படுவார்கள் என்றும் ஐதீகம் உள்ளது. மேலும் காரியதடங்கல்கள் இருந்தாலும் அது கூட இந்த விரதத்தால் நிவர்த்தியாகுமாம். 

 

அம்பாளை,கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடலாம். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வணங்கலாம். அம்பாள் துதியும் போற்றியும் சொல்லி வணங்கலாம்.

இதனால் தாலி பாக்கியம் நிலைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டின் தரித்திர நிலை விலகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்