ALL ஆன்மீகம் NEWS VIDEO
பஞ்சபூதத் தலங்கள் - அக்னி பகுதி 2
August 18, 2020 • Dharmalingam

பஞ்சபூதத் தலங்கள் - அக்னி  பகுதி 2

இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

திருவண்ணாமலை -
அருணாச்சலம் -
அண்ணாமலை - அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்

மலை வலம்

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது.

மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.

பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.

இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது.

அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் , வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.

மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்......) உச்சரிக்க வேண்டும் , அதைத் தவிர்த்து வேறு எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லது மற்றவர்களை இடித்துக் கொண்டோ செல்லக் கூடாது.

நாளை  அண்ணாமலையார் கோயில் -  பகுதி 3 தொடரும்

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

அன்பே சிவம்...சிவமே அன்பு....

திருச்சிற்றம்பலம்

ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்