ALL VIDEO ஆன்மீகம் NEWS
நாயன்மார் வரலாறு : ஏனாதிநாத நாயனார் (பகுதி 1)
July 9, 2020 • Dharmalingam

நமது உண்மை  செய்திகள்  குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு

சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்

விபூதி மேற் பத்தி மிகுதி -ஏனாதிநாத நாயனார்

சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது "கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை - மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகிற் - றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி - சிங்காரமான சிவனடி சேர்விரே" என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர். 

எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் பக்தியில் சற்றும் குறையாதவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே, திருநீறு அணிந்தவர் யாவரேயாயினும், அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார்.

பகைவர் மேனியில் திருவெண்ணீற்றின் ஒளியைக் கண்டுவிட்டால் போதும், உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும்படியான நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார்.

இப்பெரியார் சோழ மன்னர் படையில் ஒரு காலத்தில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். இப்பெரியார் வாட் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும், வாட் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் இவரிடம், வாட் பயிற்சி பெற மாணவர்கள் நிறைய வந்து சேர்ந்த வண்ணமாகவே இருந்தனர்.

வாட் பயிற்சி மூலம் கிடைத்த வருவாயை யெல்லாம் சிவனடியார்களுக்கே செலவு செய்தார். இறைவன் படைப்பில், கருணை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் படைத்தவர்களுக்கும் பகைவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். பாரெல்லாம் பால் பொழியும் தண் நிலவையும் கிரகணம் வந்து விழுங்குவதுபோல், ஏனாதிநாதரையும், பகைவன் ஒருவன் சூழ்ச்சியால் வெல்லத்தான் கருதினான். அவ்வூரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். இவனும் வாட் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான்.

தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிக மிகக் குறைந்தவன். அதனால், அதிசூரனிடம் ஆரம்பகாலத்தில் அறியாமல் வந்து சேர்ந்த ஒருசில மாணாக்கர்கள் கூட விவரம் தெரிந்ததும் விலகத் தொடங்கினர். இதனால் ஏனாதிநாதரிடம், ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று விளங்க, அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. முத்துச்சிற்பி முன்னால், வெத்துச்சிப்பி மதிப்பிழந்து தூக்கி எறியப்படுவது போல், ஏனாதிநாதர் முன்னால் எல்லாவகையிலும் மதிப்பிழந்து போனான் அதிசூரன்.  அதிசூரன், ஏனாதிநாதரிடம் அழுக்காறு கொண்டு பகைமை பாராட்டினான்.

அழுக்காறு, அவா, சினம், இன் சொல் ஆகிய தீய குணங்களை கொண்டிருந்த அதிசூரன், அன்பு, அடக்கம், பக்தி, பொறுமை, இன்சொல் ஆகிய உயர் குணங்களைக் கொண்ட ஏனாதிநாதரை எதிர்த்துப் போர் புரிந்து அவருடைய தொழில் உரிமையைக் கைப்பற்ற சங்கல்பம் பூண்டான். ஒருநாள், தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு, நாயனாரின் வீட்டை வந்தடைந்தான்.

சிங்கத்தின் குகை முன்னால் சிறு நரி ஊளையிடுவது போல், வீரம் படைத்த ஏனாதிநாதர் முன்னால் கோழை மனம் கொண்ட அதிசூரன் போர்பரணி எழுப்பினான். ஏனாதிநாதரே ! ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் எதற்கு ? அதிலும் இரண்டு ஆசிரியர்கள்தான் எதற்கு ? இவ்வூரில் வாட் பயிற்சி ஆசானாக இருப்பதற்குரிய தகுதியும், திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய, நாம் உரிமைப் போர் புரிவோம். துணிவிருந்தால் போர் செய்ய வருக என்று ஊளையிட்டான். அதிசூரனின் சவாலைக் கேட்டு ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார்.

உனக்கு இம்முறையே தக்கது என்று தோன்றினால் அவ்வாறே போர் புரிவோம். நானும் அதற்கு இசைகிறேன் என்றார். இருவர் பக்கமும் படைவீரர்கள் சேர்ந்தனர். நகரின் வெளியிடத்தில் இருவர் படைகளும் போர் செய்வதற்கு வந்து குவிந்தன.

அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது ! போரும் ஆரம்பமானது ! அணிவகுத்து நின்ற இருதிறத்து வில்வீரர்களும், வாள் வீரர்களும், பயங்கரமாக் தத்தம் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போர் புரிந்தனர்.

வாள் பிடித்த கைகளும், வேல் பிடித்த கைகளும், வில் பிடித்த கைகளும் அறுபட்டு விழுந்தன. சிரசுகள் துண்டிக்கப்பட்டு உருண்டன. வீரர்கள் மார்பகங்களை வேல்கள் துளைத்துச் சென்றன. வீரிகழல்கள் அறுபட்டு ரத்தத்தில் தோய்ந்தன. தாள்களும், தோள்களும் புண்பட்டன. இரத்தம் சிந்தின. வெளி வந்த குடல்களில் உடல்கள் பின்னிப்பிணைந்தன.

அதிசூரன் படை வன்மையாக முறியடிக்கப்பட்டது. போரில் தலைப்பட்ட பகைவர் யாவரும் கொலை செய்யப்பட்டனர். போர்க்களத்தில் போர் புரிந்து மடியாதோர், ஞான உணர்வு வந்தபோது, இதயத்திலுள்ள பற்று, பாசங்கள் மறைவது போல் போர்க்களத்தை விட்டு ஓடினர். ஏனாதிநாதர் வீரத்திற்கு முன்னால் நிற்க முடியாது புறமுதுகு காட்டி ஓடினான் அதிசூரன். ஏனாதிநாதர் வெற்றிவாகை சூடித் திரும்பினார்

பக்தியுடன் நாளை தொடரும்

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. ஓம் நமசிவாய

பக்தியுடன்  மோகனா செல்வராஜ்