ALL VIDEO ஆன்மீகம் NEWS
நாயன்மார்கள் : அதிபத்தர் நிறைவு
June 7, 2020 • Dharmalingam

நாயன்மார்கள் : அதிபத்தர் நிறைவு

அதிபத்தர் மீனை தூக்கிப் பிடித்தார், "சிவனே, என்னை ஆட்கொண்ட பெருமானே. எக்காலமும் என் கையில் இருக்கும் மீன்களில் எது சிறந்ததோ , அதை உனக்கு தந்தேன், இதோ மீனகளிலெல்லாம் மகா உயர்ந்த தங்கமீன் கிடைத்திருக்கின்றது.

மிக சிறந்த மீனை உனக்காக கடலில் விடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இதோ எடுத்துக் கொள், ஓம் சிவோஹம்" எனச் சொல்லி சிவனுக்கு கடலில் அர்ப்பணம் செய்து விட்டார். அந்த முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ கலக்கமோ இல்லை, பெரும் தனபொருள் கைவிட்டு போகின்றதே எனும் சிந்தனை துளியுமில்லை.

தன் நிலை கலங்காது எந்நாளும் எப்படி மீனை சிவனுக்காய் கடலில் விட்டாரோ அப்படியே இதையும் செய்தார். அதன் விலை என்ன? பலன் என்ன? இன்னபிற லாப சிந்தனையெல்லாம் அவரில் இல்லை.கிடைத்த பொக்கிஷமான மீனையும் சிவனுக்குப் படைத்தோம் எனும் திருப்தி மட்டும் அவரின் முகத்தில் ஒளிர்ந்தது.

அவரின் கொடிய வறுமை அவருக்கு நினைவிலில்லை, ஊரின் ஏளனமும் , சீண்டலும் அவருக்கு நினைவிலில்லை, எல்லோரும் கைவிட்டு தனிமனிதனாய், அனாதையாய்,  பிச்சைக்காரனாய் நின்றதும் அவருக்கு வருத்தமாக இல்லை.

எந்நிலையிலும் என்னிடம் உள்ளதில் சிறந்தது எதுவோ அதை என் அப்பன் சிவனுக்கு தருவேன் என நின்றார்.  அந்த மீன் அவரை மயக்கவில்லை, குழப்பவில்லை, சுயநலத்தைத் தேடச் சொல்லவில்லை.

எல்லோரும் மீனால் அவருக்கு வாழ்வு என சொல்ல, அவரோ சிவனுக்குக் கொடுக்க, மிகப்பெரும் அர்ப்பணிப்பு பாக்கியம் கிடைத்தது என்று தான் அந்த மீனைக் கண்டார்.

ஆம்.  அவர் அவருக்காக வாழவில்லை, அவரின் வாழ்வும், நோக்கமும், எண்ணமும் எல்லாமே சிவம், சிவம், சிவம் ஒன்றே.

அந்த அன்பு சிவனை தோற்கடித்தது, மகா தூய்மையான அன்பின் உச்ச பக்தியில் சிவனையே தோற்கடித்தார் அதிபத்தர்.

அந்த நொடி, சிவன் பெயரைச் சொல்லி தங்கமீனை அதிபத்தர் கடலில் இட்ட அந்த நொடி..

அவர் புன்னகையும் நிம்மதியும் கொண்டு , துளி சஞ்சலமின்றி அந்த தங்கமீனை சிவனுக்காக கடலில் விட , வானில் பேரொளி தோன்றிற்று, ஒளியின் நடுவில் சிவபெருமான் ரிஷபம் மேல் பார்வதியுடன் இருந்தார்.

ஊர் அறிய உலகறிய அவரின் பக்திக்குச் சான்றாக சிவனே அங்கு வந்தார், வந்து அருள் புரிந்தார். அதிபத்தர் இழந்த எல்லா வாழ்வும் திரும்பிற்று.

"எல்லாவற்றையும் விட என்மேல் அன்பு வைத்து அதை நிரூபித்தும் காட்டிய அதிபத்தா, உன் புகழ் எக்காலமும் நிலைக்கும், அத்தோடு கயிலையில் நீ என் திருவடியில் இருக்கும் பாக்கியம் பெறுவாய்.." என சொல்லி வாழ்த்தி சென்றார் சிவன்.

அதன் பின் பெருவாழ்வு வாழ்ந்த அதிபத்தர் பூமியில் வாழ்வு கடன் முடித்தபின் சிவலோகப் பதவி அடைந்தார்.

எந்நிலையிலும் கலங்காத, குறையாத சிவனின் மேலான அன்பு அவரை நாயன்மார்களில் முதலிடத்தில் வைத்தது.

63 நாயன்மார்களில் முதல் நாயன்மார் இந்த அதிபத்தரே.

இது எப்படி சாத்தியமாயிற்று?

அதிபத்தர் சாமான்யன், அவருக்கு வேதம் தெரியாது, லிங்கம் தெரியாது, அபிஷேகம் தெரியாது, மந்திரம் தெரியாது, வில்வ இலை அர்ச்சனை தெரியாது, சிவன்  மூலகடவுள் என்பதைத் தவிர எதுவும் தெரியாது.

ஆனால் அந்த பக்தியில் உன்னதமாய் உறுதியாய் இருந்தார், தன் மனதில் சிவனுக்கு அவ்வளவு பெரும் இடம் கொடுத்திருந்தார். அந்த அன்பின் உறுதியே அவரை இயக்கிற்று. அந்த அன்பின் தன்மையே அவரை நாயன்மார்களில் முதல் நபராக்கிற்று, காலாகாலத்திற்கும் முதலிடத்தில் அவரை சேர்த்தும் விட்டது.

அவரை நாயன்மார் வரிசையில் சேர்த்தது கல்வியா? வேதமா? வழிபாடா? யாகமா? தவமா? எதுவுமில்லை. மாறாக அன்பு, எனக்கு உன்னை தவிர ஏதும் தெரியாது சிவனே என சரணடைந்த அந்த தூய அன்பு.

அதிபத்தரை வாழ்த்திவிட்டு கயிலாயத்தில் அமர்ந்திருந்தார் சிவன், பூலோகம் எங்கும் அதிபத்தரின் சிவ‌ அன்பும் , சிவன் அவனுக்கு காட்சி கொடுத்ததுமே பேச்சாய் இருந்தது.

சிவனை நோக்கி மெல்ல சிரித்தாள் தேவி, "என்ன சிரிப்பு இது ", என வினவினார் சிவன்.

"நாதா, உங்கள் மேல் அன்பு கொண்ட அடியவரே இவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருந்தால், அவர் வணங்கும் நீங்கள் எவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.  அன்பே சிவம்" என மெல்ல சொன்னார் தேவி.

"ஆம் தேவி, எந்த சக்தியாலும்  கட்டமுடியாத என்னை அன்பு எனும் ஆயுதம் கட்டிப் போடுகின்றது. இதை உணர்ந்து தான் அசுரரும் தவமிருந்து என்னை உருகச் செய்து அவர்களுக்கு வேண்டிய வரத்தை பெறுகின்றனர்.

அன்பு கொண்டு எவர்வரினும் நான் அவர்கள் யாரென பார்ப்பதில்லை, நோக்கம் பற்றி சிந்திப்பதில்லை, அன்பு ஒன்றே அவர்கள் முகவரி.   அன்பு என்ற கயிறால் என்னை கட்டுகின்றார்கள், அன்பால் என்னை அடைந்து அவர்கள் கேட்கிறார்கள்.. நான் கொடுத்து விடுகின்றேன் தேவி.."

ஆம், சிவன் எனும் மிகப்பெரும் பரம்பொருள் யாகத்துக்கோ, பலிக்கோ, வழிபாட்டுக்கோ, இல்லை பிரார்த்தனைகளுக்கோ கட்டுப்படுபவர் அல்ல. அவர் அன்பே உருவானவர், அன்பு ஒன்றுக்கே அந்த சிவம் அசையும் என்பதை நிரூபித்து முதல் நாயன்மார் எனும் பதத்தை அடைந்தார் அதிபத்தர்.

அவரை தன் காலடியில் சேர்த்து அது மகா உண்மை என நிரூபித்தார் சிவன். சிவனும் சிவனடியாரும் அன்பும் வேறல்ல, மூன்றும் ஒன்றே.

இன்றும் நாகையில் வருடாவருடம் அந்தக் காட்சி நடைபெறும். திருசெந்தூர் சூர சம்ஹாரம் போல, மதுரை மீனாட்சி கல்யாணம் போல நாகையில்  ஆவணிமாதம் ஆயில்ய நட்சத்திர நாள் தங்கமீனை படகில் சென்று கடலில் விடும் நிகழ்வு நடைபெறும்.

அந்த நுளம்பாடி இருந்த இடம் இப்போதைய நாகையின் நம்பிக்கை நகர் பகுதியாகும்.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் இருந்து கிளம்பும் ஊர்வலம் அப்படியே அமுதீசர் கோவிலை அடையும் . அமுதீசர் கோவிலில் இருந்து தங்கமீன் சிலையினை எடுத்து செல்லும் அதிபத்த நாயனாரின் வாரிசில் ஒருவர் (ஆம் அவரின் வாரிசுகள் இன்றும் உண்டு) அந்தத் தங்க மீனை சிவன் பெயரை சொல்லி கடலில் விடுவர். அப்பொழுது மேளம் இசைக்கப்படும். ஆலய மணி முழங்கும்.மிக விமரிசையாக நடக்கும் அந்த விழாவும், திருத்தொண்டர் புராணமும் எக்காலமும் அதிபத்தரின் அன்பினை பக்தியினை சொல்லிக் கொண்டே இருக்கும்.

நாகை கடல் அலை அதிபத்தரின் நினைவினை சுமந்து கொண்டே வீசிக் கொண்டிருக்கின்றது.

கடலும் மீனும் உள்ள அளவும் நிலைத்திருப்பார் அதிபத்தர்.  மீனையும் கடலையும் காணும் பொழுதெல்லாம் அதிபத்தர் உங்கள் நினைவில் வந்தால் சிவனின் அருள் உங்களையும் வந்தடையும்.

அன்பே சிவம்" பக்தியுடன் மோகனா செல்வராஜ்