ALL VIDEO NEWS ஆன்மீகம்
தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்
August 3, 2020 • Dharmalingam

திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று.திருநெய்த்தானம் திருவையாற்று சப்தஸ்தான தலங்களில் ஏழாவது தலம்

சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார்.

இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்

நெய்யாடியப்பர் ஆலயம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது.

இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் வாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காடசி தருகிறாள். அம்பாள் சிலை

ஒரே கல்லில் வடிக்கப்பட்ட உருவமாகும். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார்.

மூலவர் கருவறை பிரகாரத்தில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 52வது சிவத்தலமாகும்.

இத்தலத்து இறைவன் நெய்யாடியப்பர். இறைவி பாலாம்பிகை. 

மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.

சிறப்புகள்:    இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.

அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது. 

கல்வெட்டுக்களில் இத்தலம் "இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.

இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது.

இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது.

இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.

தேவாரப் பாடல்கள்  :1. சம்பந்தர் - மையாடிய கண்டன்மலை. 
                                              2. அப்பர்   - 1. காலனை வீழச் செற்ற,  2. பாரிடஞ் சாடிய,                                                   3. கொல்லி யான்குளிர், 4. வகையெலா முடையா
                                              5. மெய்த்தானத் தகம்படியுள்.

சம்பந்தர்

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்    
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்    
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்    
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 

அப்பர்

காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே. 

 திருவையாற்றில் இருந்து மேற்கே 2 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....

திருச்சிற்றம்பலம்

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்