ALL VIDEO ஆன்மீகம் NEWS
திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்
July 31, 2020 • Dharmalingam

திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்

திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமனும் வேதமும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 14வது சிவத்தலமாகும்.

திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் நான்காவதாக போற்றப்படுகிறது.

தல வரலாறு

 வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ( 'விழுதிகுடி' என்பது மருவி 'வேதிகுடி' ஆயிற்று என்பர் ஒருசாரார்.)

சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காணப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. இராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. உள் பிராகாரம் வலம் வரும்போது செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரை தரிசிக்கலாம்.

கருவறையில் மூலவர் வேதபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தான தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.

சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.

பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்கச் சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். இவருக்கு வேதப்பிள்ளையார் என்று பெயர்.

இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.

தல சிறப்புக்கள்

மகாமண்டபத்தில் உள்ள விநாயகர் (தலவிநாயகர்) வேதவிநாயகர் எனப்படுகிறார்.

இறைவன் நான்கு முகங்களாலும் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில்; இடக்காலை உயரமாக வைத்து அற்புதமாகக் காட்சித் தருகிறார்.

முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி "வேதிகுடி மகாதேவர் " என்றும், "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்படுகிறார்.

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

இத்தலத்திற்கான திருஞானசம்பந்தரின் பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருமண தோஷம் நீங்கி, ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சியுடன் திருமணச் சடங்குகள் செய்து, முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் தலம் இது என்று தனது தேவாரப் பிதிகத்தில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்ப ரிடபம்

ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்த விடமாம்

தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளை மடுவில்

வேறுபிரி யாதுவிளை யாடவள மாரு(ம்)வயல் வேதி குடியே.

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது

வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்

செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி

ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே

புராண பெயர்(கள்): திருவேதிகுடி
பெயர்: திருவேதிகுடி வேதபுரீசுவரர் திருக்கோயில்

கோயில் தகவல்கள்
மூலவர்: வேதபுரீசுவரர், வாழைமடுநாதர்.
தாயார்: மங்கையர்க்கரசி.
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: வேத தீர்த்தம்
ஆகமம்: சிவாகமம்

பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர்

வரலாறு அமைத்தவர்: சோழர்கள்

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வந்து அங்கிருந்து வீரசிங்கன்பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற ஸ்தலமும் அருகில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு. கண்டியூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

அமைவிடம்: ஊர்: வேதிகுடி, திருக்கண்டியூரிலிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது.  மாவட்டம்: தஞ்சாவூர்

இவ்வாலயம் தினந்தோறும் காலை 10-30 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....

திருச்சிற்றம்பலம்

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்