ALL ஆன்மீகம் NEWS VIDEO
திருவாசகமே மாணிக்கவாசகர் - ஜி. யு. போப் கருத்து:
June 25, 2020 • Dharmalingam

ஓம் நமசிவாய ,

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.

'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.

'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.(மாணிக்கவாசகர்)

அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் ( சிவபிரான்) பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார்.

இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் (திருக்கோவை) பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.

முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார்.

அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது.

மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார்.

மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் (மாணிக்கவாசகர்) கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார்(மாணிக்கவாசகர்) பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

வியாழக்கிழமை 25. 6. 2020 இன்று, மாணிக்கவாசகர் சொல்ல, இறைவன் சிவன், சிவபுராணத்தை, திருவாசகத்தை தன் கைப்பட எழுதிய நாள்.

26.6.2020 அன்று மாணிக்கவாசகர், தில்லை அம்பலத்தில் அதாவது சிதம்பரத்தில் இறைவனுடன் ஜோதியாக கலந்த நாள்.  

இந்த இரண்டு நாட்களை நினைவு கூறும் விதமாக, இறைவனுக்கும் மாணிக்கவாசகருக்கும் நன்றி கூறும் விதமாக, 25. 06. 2020 வியாழன் அன்றும் மற்றும் 26.06.2020 வெள்ளி அன்றும், இந்திய நேரப்படி மாலை 6 மணியில் இருந்து 7 வரை திருவாசக பாராயணம் அவசியம்.

இந்தப் பதிவை படிக்கும் அனைவரும், அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே சிவபுராணத்தை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* சிவபுராணம் வரிகள்*    திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

மாணிக்கவாசக பெருமானிடம் சிவ பெருமான் என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்

அதற்கு மணிவாசகர் கேட்கிறார்

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே.

 விளக்கம் :

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.

ஆனாலும் சிவ பெருமான் மணிவாசகரை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்..

உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...!

 விளக்கம் : 

சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும்.

குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும். பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார். என்று பக்தியால் மனம் உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்.       

ஜி. யு. போப் கருத்து:

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி,  "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை"  என்று குறிப்பிடுகின்றார்

திருவாசகமாய் இருப்பது சிவன் என்பதினால், திருவாசகத்தை அல்லது சிவபுராணத்தை மட்டுமாவது பாராயணம் செய்வதால் அனைத்து விதமான நன்மைகளும், பாராயணம் செய்பவருக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் கிடைக்கும்.

இந்தப் பதிவை தயவுசெய்து அனைவரும், தங்கள் சுற்றத்தினர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பகிரவும்.

திருச்சிற்றம்பலம்.  சிவாய நம

தென்னாடுடைய  சிவனே  போற்றி  எந்நாட்டவர்க்கும்  இறைவா போற்றி 

பக்தியுடன்    மோகனா  செல்வராஜ்