ALL VIDEO ஆன்மீகம் NEWS
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
July 29, 2020 • Dharmalingam

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. 

சப்தஸ்தான ஸ்தலங்களில் இத்தலம் இரண்டாவதாகும்

பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும்.

இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

திருவையாறுக்குக் கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது.

கோவில் அமைப்பு:

ஆலயம் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அரைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.

முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

உள்மண்டபத்தில் நுழைந்ததும் நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது.

கருவறை தென்பற கோஷ்டத்தில் நடுவில் ஜடாமுடி, நெற்றிக் கண்ணுடன் சிவனும், இடதுபக்கம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர்.

வெளிப்பிராகாரத்தில் அம்பாள் பெரியநாயகி சந்நிதி உள்ளது. பலாமரம், தலமரமான வாழை உள்ளன. ஆலயம் முழுவதும் அழகிய சிற்பஙளுடன் விளங்குகிறது. திருப்பழனம் ஆலயத்தை ஒரு கலைப் பெட்டகம் என்றே கூறலாம்.

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

ஊர்:  திருப்பழனம்
மாவட்டம்: தஞ்சாவூர்
மூலவர்: ஆபத்சகாயர்
இறைவி :பெரிய நாயகி
தல விருட்சம்: கதலி (வாழை), வில்வம்
தீர்த்தம்: மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி

 

பதிகம்:

திருநாவுக்கரசர் - 5
திருஞானசம்பந்தர் - 1

தேவாரப் பாடல்கள்  : 1. சம்பந்தர் - வேதமோதி வெண்ணூல்.

      2. அப்பர்   - 1. சொன்மாலை பயில், 2. ஆடினா ரொருவர்,
      3. மேவித்து நின்று, 4. அருவ னாய்அத்தி, 
      5. அலையார் கடல்நஞ்ச.

தல வரலாறு

அந்தணச் சிறுவன் ஒருவனை எம தருமன் துரத்தி வந்தபோது சிறுவன் இத்தலத்தின் இறைவனிடம் தஞ்சம் புகுந்தான்.

அதன் பொருட்டு ஆபத்தில் இருந்த சிறுவனை இறைவன் காப்பாற்றியதால் ஆப்த சகாயேஸ்வரர் எனும் பெயர் இறைவனுக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது.

தல பெருமை:

குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா, சந்திரன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள்.

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும்

ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்

சிறப்பு திருவிழாக்கள்:
ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நன்றி. 

ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....

திருச்சிற்றம்பலம்

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்