ALL VIDEO ஆன்மீகம் NEWS
தினம் ஒரு நாயன்மார் வரலாறு : எறிபத்த நாயனார் (பகுதி 2)
July 4, 2020 • Dharmalingam

நமது உண்மை  செய்திகள்  குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு :

நேற்றைய  தொடர்ச்சி  எறிபத்த நாயனார்

சிவநாதா ! சிவநாதா ! என்று பசுபதிநாதரைத் துதித்தார் சிவகாமியாண்டார் அடியார். அவருக்கு கோபம் மேலிட்டது. நிலத்தில் கிடந்த கழியை எடுத்துக்கொண்டு யானையை அடிக்க அதன் பின்னால் ஓடினார்.யானை அதற்குள் வெகு தூரம் ஓடிவிட்டது.

எம்பெருமானே ஓலம் ! புலித் தோல்தனைப் பொன்னாற் மேனிதனில் போர்த்தவனே ஓலம் !! உமது பொற் பாதங்களில் சாத்திக் களிக்கக் கொண்டு வந்த புத்தம் புது மலர்களை இக்களிறு அநியாயமாக நிலத்தில் கூடையோடு கொட்டிக் கெடுத்து விட்டதே ! இறைவா ! நான் என்செய்வேன் ! மகாதேவா ! சாம்பசிவா ! தயாபரா ! பசுபதீசுரா ! ஆனிலைப் பெருமானே ! ஓலம் !! ஓலம் !! ஐயனே ! இனியும் என் உயிர் தங்குவது முறையல்லவே ! சிவநாதா ! சிவநாதா  ! ஓலம் ! ஓலம் ! சிவகாமியாண்டார் ஓலமிட்டவாறு சின்னக் குழந்தை போல் அழுது கொண்டேயிருந்தார்.

இந்த சமயத்தில், அவ்வழியே வந்து கொண்டிருந்தார் எறிபத்தர். அவரது காதுகளில் அந்தணரின் ஓலக்குரல் வீழ்ந்தது. அவர் வேகமாக ஓடிவந்து சிவகாமியாண்டாரை அணுகி, நடந்த விவரத்தைப் பற்றிக் கேட்டார்.

அந்தணர் நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விளக்கமாக கூறினார். அந்தணர் மொழிந்ததைக் கேட்டு, சினங்கொண்டு கொதிப்புற்ற எறிபத்தரின் கண்கள் கனலாக மாறின. தோள்மீது இருந்த கோடாரியைக் கையிலே தூக்கிப் பிடித்தார். சிவனடியார்களுக்கு வழி வழியாகப் பகையாக இருப்பது யானை ஒன்றுதான் ! அதனை இப்பொழுதே கொன்று வீழ்த்துகிறேன் என்று சூளுரைத்தார்.

பட்டத்து யானை சென்ற திசை நோக்கி ஓடினார் ! இவர் சீறி எழுந்த காட்சி பெருங்காற்றும், வெந்தணலும் கலந்து பொங்கி எழுந்தது போல் இருந்தது ! மத யானை ஓடிக்கொண்டிருந்தது. எறிபத்தர் வேகமாக ஓடிச்சென்று யானையின் முன்னால் நின்றார். யானையைக் கொல்ல, சிங்கம் போல் பாய்ந்தார். அவ்வளவுதான் ! யானை, எறிபத்தரை நோக்கி, துதிக்கையைத் தூக்கிய வண்ணம் பாய்ந்தது. எறிபத்தர் கோபாவேசத்துடன், கோடாரியை எடுத்து பலமாக வீசி பூக்கூடையைப் பற்றி இழுத்து துதிக்கையைத் துண்டு பட்டுக் கீழே விழுமாறு செய்தார்.

மதக்களிறு இடி இடிப்பது போல் பயங்கரமாக பிளிறிக்கொண்டு நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானைக்கு ஏற்பட்ட நிலை கண்டு யானைப் பாகன் கதிகலங்கிப் போனான். யானையைக் காண அருகே சென்றான். யானை முன்னால் கோடரியும் கையுமாக நிற்கும் எறிபத்தரைக் கண்டான். எறிபத்தருக்குக் கோபம் தணியவில்லை. ருத்ரமூர்த்தி போல் காட்சி அளித்தார்.

யானையருகே விரைந்து வந்து கொண்டிருந்த யானைப் பாகனையும் குத்துக்கோற்காரனையும் கண்டார். அவர்களைப் பார்த்து, ஆத்திரத்துடன், மதக்களிற்றை அடக்க முடியாமல் தொண்டருக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த உங்களை சும்மா விடுவதா ? ஆணவக்காரர்களே ! யானையைவிடக் கேவலமானவர்களே ! உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் ! என்று கனல் தெறிக்கப் பேசினார்.

கோடாரியால் ஐவரையும் வெட்டிக் வீழ்த்தினார். இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் மன்னர்க்கு அறிவிக்கப் பலர் ஓடினர் ! பட்டத்து யானை வெட்டுண்டதையும், அதைத் தொடர்ந்து ஐவர் கொல்லப்பட்டதையும் மன்னர்க்கு அறிவித்தனர்.

இச்செய்தியைக் கேட்டு மன்னர் புகழ்ச்சோழர் மனம் பதறிப் போனார். அவரது கோபம் எல்லை மீறியது. அக்கணமே மன்னர் எறிபத்தரைப் பழிவாங்கப் புறப்பட்டார்.

அவர் பின்னால் படையும் மடை திறந்த வெள்ளம் போல் திரண்டது. அணி, தேர், புரவி, ஆட்பெரும் படைகள் சங்கு, காளம், பேரிகை முதலான் போர் சின்னங்கள் ஒலி எழுப்ப, அணிவகுத்து புறப்பட்டன.

வீரர்கள் வேல், வாள், சக்கரம், மழு, சூலம் முதலிய ஆயுதங்களுடன் ஆர்ப்பரித்து எழுந்தனர். மன்னர் புரவியில் வேகமாக கொலைக்களத்திற்கு வந்தார் ! படையைச் சற்று தொலைவில் நிறுத்தி வைத்துவிட்டுப் பட்டத்து யானை இறந்து கிடக்கும் இடத்திற்கு புரவியில் அமர்ந்து சென்றார்.

வேல்நம்பி எறிபத்தர் அடியார்க்கும் அடியேன்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🤘ஓம் நமசிவாய

பக்தியுடன் நாளை தொடரும்   மோகனா செல்வராஜ்