ALL NEWS ஆன்மீகம் VIDEO
தினம் ஒரு நாயன்மார் வரலாறு : எறிபத்த நாயனார் (பகுதி 1)
July 3, 2020 • Dharmalingam

நமது உண்மை  செய்திகள்  குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு :

எறிபத்த நாயனார்

இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய கரிகாற் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை முடிசூட்டிக் கொள்ளும் சிறப்புக் கொண்டது கரூர்! அவ்வூரில் மணி மண்டபங்களும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்து விளங்கின. அமராவதி என்னும் வற்றாத நதி ஒன்றும் வளம் கொழிக்க ஓடிக்கொண்டிருந்து. அந்நதியின் இருமருங்கிலும் பெருந்தவசிகள் ஆசிரமம் அமைத்து அருந்தவம் செய்து வந்தனர். இந்நகரத்தில் ஆனிலை என்னும் ஓர் ஆலயம் அமைந்திருந்தது. எம்பெருமானுக்கு பசுபதீசுரர் என்றும், ஆனிலையயுடைய மகாதேவர் என்றும் நாமங்கள் உண்டு.

இத்தலத்தில் எம்பெருமானைக் காமதேனு வழி பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆனிலைப் பெருமானை வழிபடும் அடியவர்கள் பலருள், எறிபத்தர் என்பவரும் ஒருவர். இவர் சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீரு எந்நேரமும் ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். ஜடா முடியிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும், உருத்திராட்ச மாலைகள் எந்நேரமும் அணிந்திருப்பார்.

சிவனடியார்களுக்கு எவ்வித துயரமும் நேராவண்ணம் அவர்களைப் பாதுகாத்து வருவதைக் தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அடியார் அதற்காக எந்நேரமும் ஒரு மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டிருப்பார். தம்மிடமுள்ள மழுவாயுதத்தினால் அடியார்களுக்கு இடர் செய்யும் பகைவர் மீது எறிந்து, அடியார்கள் துயரத்தைப் போக்குவார். இது காரணம் பற்றியே அவருக்கு எறி பக்தர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

காலப்போக்கில் அவரது காரணப் பெயர் வழக்கிலே வேரூன்றி அவருடைய இயற்பெயர் மறைந்து போனது. எறிபத்தர் பக்தியோடு நல்ல வீரத்தையும் பெற்றிருந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். கள்வர்க்கும் அஞ்சமாட்டார். நாட்டு மன்னனுக்கும் நடுங்க மாட்டார்.

அவர் பரமனுக்கும், பரமனது அன்பர்களுக்கும் மட்டும்தான் பயந்து வணங்கித் தலை குனிந்து நிற்பார். அவ்வூரில் இவரைப் போலவே ஆனிலை பெருமானிடம் பேரன்பு பூண்டிருந்த சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் இருந்தார். இவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். வயது முதிர்ந்தவர். முக்கண்ணணுக்கு, முத்துப்பனி தூங்கும் பூக்களால் மாலைகள் தொடுத்துச் சாத்தும் சிறந்த தொண்டினை தமக்கு விவரம் தெரிந்த நாள் முதற்கொண்டு தவறாது செய்து கொண்டிருந்தார்.

இச் சிவத்தொண்டர் வைகைறயில் எழுவார்; தூய நீராடுவார்; நெற்றியிலும், மேனியிலும் திருவெண்ணீற்றை சிவாகம முறைப்படிப் பூசிக் கொள்வார். வாசனை மிகுந்த மலர்களைக் கொய்து வர நந்தனம் செல்வார். மலர் கொய்யும் பொழுது, பூக்களின் மீது மூச்சுக் காற்று படாமல் இருப்பதற்காக தமது வாயைத் துணியால் கட்டிக் கொள்வார்.

இவர் பஞ்சாட்சர மந்திரத்தை இடையறாது ஓதிய வண்ணம் மலரும் நிலையிலுள்ள வண்டுகள் தீண்டாத பூக்களை நிறையப் பறித்துக் கூடையில் நிரப்பிக் கொள்வார். எவ்வளவுதான் கூடை நிறையப் பூக்களைப் பறித்து நிரப்பிக் கொண்டபோதும், இவரது ஆசை மட்டும் ஒருபோதும் தணியவே தணியாது. இன்னும் நிரம்பப் பூக்கள் பறிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் இவரது மனதிலே நிறைந்திருக்கும்.

இவ்வந்தணர் கையிலே ஒரு கழி வைத்திருப்பார். அக்கழியிலே பூக்கூடையை மாட்டிக் கொண்டு, திருக்கேயிலுக்குப் புறப்படுவார். மலர்களை மாலையாக்கி, மகாதேவனது அரவமணிந்த மேனியில் அழகுறச் சாத்தச் செய்வார். அன்றைய தினம் புரட்டாசித் திங்கள் ! அஷ்டமி திதி பசுபதீசுரருக்குத் திருவிழாவும் கூட  அதனால் நகரமெங்கும் வாழை மரங்களும், கமுகுகளும், தென்னங்குருத்துத் தோரணங்களும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளித்தன.

கடைகளும், வேடிக்கைப் பொருட் கூடங்களும் ஏராளமாக இருந்தன. மக்கள் கூட்டம் கடல் போல் வெளியூர்களில் எல்லாமிருந்து வந்து நிறைந்த வண்ணமாகவே இருந்தன.

கைலாசமே கருவூருக்கு வந்தது போன்ற எழிற்காட்சி ! அந்த அஷ்டமி திதியன்று - வைகறைப்பபொழுது வழக்கம் போல் சிவகாமியாண்டார் பூக்களைக் கூடையில் நிரப்பிக் கொண்டு மன நிறைவோடு ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.

அப்பொழுது அரண்மனைச் சேவகர்கள் அவ்வழியே பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் நீராட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று பட்டத்து யானைக்கு எதனாலோ மதம் பிடித்துக் கொண்டது. யானை கட்டுக்கடங்காமல் ஓடத் தொடங்கியது.

திருவிழா பார்க்க வந்த மக்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓட்டம் பிடித்தனர். யானை மீது இருந்த பாகன் அதனை அடக்க முயன்றான்; முடியவில்லை. யானையுடன் வந்த குத்துக்கோற் காவலர்கள் கூட, யானையை அடக்க முயற்சி செய்து தோல்வியைத்தான் அடைந்தனர். அவர்கள் தப்பித்ததே பெரும் பாடாகிவிட்டது.

அப்பொழுது அவ்வழியாக மலர்க் கூடையுடன் சிவகாமியாண்டார் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். மக்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடுவதையும், யானை மதம் பிடித்து ஓடிவருவதையும் கண்டு சிவகாமியாண்டார் பயந்து நடுங்கி, பூக்கூடையுடன் ஓட முயன்றார். அவரால் முடியவில்லை. கூட்டம் கூட்டமாக மக்கள் பலர் ஓடிக்கொண்டேயிருந்தனர். அக்கூட்டத்தாரிடையே இவ்வந்தணர் சிக்கிக் கொண்டார்.

அவரால் முடிந்தமட்டும் வேகமாக ஓடிப் பார்த்தார். அதற்குள் மதக்களிறு அவரை நெருங்கி விட்டது. அது தனது துதிக்கையால் சிவகாமியாண்டார் தோளில் பிடித்திருந்த பூக்கூடையைக் கழியோடு பற்றி இழுத்து வீதியில் சிதறிவிட்டு அவரை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு ஓடியது.

வேல்நம்பி எறிபத்தர் அடியார்க்கும் அடியேன்.

மேலும் நமது ஆன்மீக பயணம் நாளை தொடரும்.

நன்றி. ஓம் நமசிவாய

 

பக்தியுடன்  மோகனா செல்வராஜ்