ALL VIDEO ஆன்மீகம் NEWS
சென்னையில் நவக்கிரஹ கோயில்கள் - கேது
August 13, 2020 • Dharmalingam

சென்னையில் நவக்கிரஹ கோயில்கள்

நவகிரஹங்கள் இறைவனை வணங்கி நலம் பெற்ற  திருத்தலங்களே
நவக்கிரஹ கோயில்கள் ஆகும்

தொண்டை நாடு கேது ஸ்தலம்

வட கீழ்ப்பெரும்பள்ளம்  - கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயம் 

நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற, எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள், கேதுவின் அருளால் சட்டென்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள்.

கேது பரிகார தலம்

போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயம் கேதுவுக்குரிய பரிகார தலம். இதனை வட கீழ்ப்பெரும்பள்ளம் என்றும் அழைக்கின்றனர்.

இறைவன் நீலகண்டேஸ்வரர் இறைவி ஆதி காமாட்சி. ஒவ்வொரு நாளும் வரக்கூடிய எமகண்ட வேளை என்பது கேதுவுக்கு உரிய நேரமாகும்.

சிவனுக்கும் நந்திக்கும் நடுவே விதானத்தில் சூரியனை கேது விழுங்குவது போன்ற சிற்பம் உள்ளது. அதற்கு நேர் கீழே நின்றபடி ஸ்வாமியை தரிசனம் செய்தல் நல்லது.

கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிப்பர். ஆனால் கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர், அத்தகையவர்களை அரவணைத்து ஆதரவளிக்கிறார்.

இக்கோயிலில் கேது பகவானை தனி சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில், நடுவில் காளிங்கநர்த்தன கண்ணன் வடிவில் இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட நேரம் கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்ட நேர பூஜைகள் விசேஷம்.

கோயிலில் முதலில் தரிசனம் தருகிறார், ஆதி காமாட்சி. ஐந்தரை அடி உயரத்தில் அன்பே வடிவாய் திருக்காட்சி அளிக்கிறாள் அன்னை. மூலக் கருவறையில் ஈசன், நீலகண்டேஸ்வரராக அருள்கிறார்.

அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வலி தாங்காமல் வாசுகி நஞ்சைக் கக்கியது.

பாற்கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. இரண்டும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய விஷமாய் மாறின.

யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நஞ்சை சட்டென விழுங்கினார் ஈசன். அதைக் கண்டு பதைபதைத்த பார்வதி, அந்த நஞ்சு தொண்டையை விட்டுக் கீழே இறங்காதபடி அதை ஈசனின் கண்டத்திலேயே நிறுத்தினாள்.

ஈசன் அன்று முதல் நீலகண்டேஸ்வரர் ஆனார். அந்த நீலகண்டேஸ்வரர் தன் தேவி ஆதி காமாட்சியோடு அருளும் அற்புதத் தலம் இது.

ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில் சூரியனை கேது விழுங்குவது போல ஒரு சிற்பம் காணப்படுகிறது.

இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகின்றன.

நவகிரக நாயகர்களின் சந்நதியின் மேல் விதானத்திலும் சூரியனை கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.

சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது இத்தலம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 

திறக்கும் நேரம்:

ஆலயம் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

அன்பே சிவம்...சிவமே அன்பு....

திருச்சிற்றம்பலம்

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்