ALL VIDEO ஆன்மீகம் NEWS
சென்னையில் நவக்கிரஹ கோயில்கள் ஸ்ரீ அகத்தீஸ்வரர்ர் திருக்கோவில்
August 11, 2020 • Dharmalingam

சென்னையில் நவக்கிரஹ கோயில்கள்

நவகிரஹங்கள் இறைவனை வணங்கி நலம் பெற்ற  திருத்தலங்களே
நவக்கிரஹ கோயில்கள் ஆகும்

வடதிருநள்ளாறு என்று போற்றப்படுவது பொழிச்சலூரில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம்.

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அகத்தியர் காலத்தில் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து வழிபட்டார் என தலவரலாறு கூறுகிறது. 

தொண்டைமண்டல புகழ்நாட்டில், புகழ்சோழநல்லூர் என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்டது.

பல்லவர்கள் காலத்தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது. அகத்திய மாமுனி தனது தென்னக யாத்திரையின்போது தொண்டைமண்டலம் முழுக்க பல இடங்களில் சிவலிங்கங்களை ஸ்தாபித்து ஆலயங்களை எழுப்பி வந்தார்.

இந்த பொழிச்சலூர் தலத்தில் தங்கியிருந்த அகத்தியருக்கு, ஈசனே சுயம்புவாக தோன்றி காட்சியளித்தார். அதனால் இங்குள்ள ஈசன் அகத்தீஸ்வரராகவும், அம்பிகை ஆனந்தவல்லி என்றும் திருநாமம் கொண்டு அருள் செய்கின்றனர்.

தல வரலாற்று சுருக்கம் சென்னை அருகே சென்னை விமான நிலையம் பின்புறம் 2 கி.மீ பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி,மீ தொலைவில் உள்ள பொழிச்சலூர் கிராமத்தில் இருக்கும் தொண்டை மண்டல நவகிரக பரிகார ஸ்தலங்களில் வட தமிழ்நாட்டில் இந்த ஓரே ஸ்தலம் மட்டும் தான்

சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு பரிகார ஸ்தலமாக விளங்கும் பொழிச்சலூர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.

இந்த ஆலயத்தில் சிவனைப்போலவே சனிபகவானுக்கு தனி வழிபாடுகள், பூஜைகள் செய்யப்படுகிறது. விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சந்நிதிகள் இங்கிருக்கின்றன.

வடக்கு வாசல் வழியே உள்ளே நுழைய இடது பக்கமாக, சம்ஹார மகா காலபைரவர் சந்நிதி அமைந்துள்ளது. 

ஒன்பது கிரகங்களில் சனிபகவான் நடுநிலை தவறாத நீதிமான் என்பதாலும், துல்லியமான பலன்களைக் கொடுப்பவராகப்  போற்றப்படுகிறார். 

தமிழ்நாடு சுற்றுலாதுறை நவகிரக பரிகார ஸ்தலங்களில் சனி பகவானுக்கு பரிகார ஸ்தலமாக இந்த ஆலயத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

சனிபகவான் பிறர்க்கு எப்பொழுதும் கண்ட சனி, ஜென்ம சனி, ஏழரை சனி, என்று பலவிதமாக பக்தர்களை பிடித்து வாட்டி வதைத்து துன்பம் கொடுத்து வந்ததால், அதனால் இவருக்கு ஏற்பட்ட தன் பாவங்களை போக்கிகொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டுபண்ணி சிவபெருமானை வழிபட்டு சனிபகவான் அவர் பிறர்க்கு செய்த தன் பாவத்தை போக்கி அவரது தோஷம் நீங்கி பாவ விமோசனம் கிட்டியதால், இவ்வாலயத்தில் சனிபகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார்.

வடதமிழ்நாட்டில் சென்னையில் இந்த ஒரே ஆலயம் ஒன்றுதான் சனிபகவானுக்கு என்று சனிதோஷநிவர்த்தி பரிகார ஸ்தலமாகவும், நாடி ஜோதிடத்தின் பாவவிமோசனம் செய்ய பரிகார ஸ்தலமாகவும் சிறப்புற்று விளங்கிவருகின்றது.

இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நெய்வேத்தியம் செய்யும் நேரத்தில் சனிபகவானுடைய வாகனமான நடமாடும் தெய்வமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டு செல்லும்.

இந்த நேரத்தில் தோஷநிவர்த்தி செய்பவர்களும் இவ்வாலயத்தில் உள்ள, வருகின்ற நடமாடும் தெய்வங்களாக உள்ள காக்கை, மாடு, நாய் இவற்றிக்கு அன்ன தீவணம் செய்தால் உங்களுக்கும் தோஷங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.

பழமை வாய்ந்த கோயிலாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும் கி.பி 12-ம் நூற்றாண்டு சோழ மன்னர் ஆட்சிபுரிந்த காலகட்டத்தில் கஜபிருஷ்ட விமான அமைப்புடன் வேளாளர்  முன்னோர்களுக்கு சொந்தமான இடத்தில் வேளாளர் முன்னோர்களால் கட்டப்பெற்றதாகும்.

இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி வந்தபொழுது இங்கு சிலகாலம் தங்கி பூஜை செய்து வந்ததால் இறைவன் அகத்தீஸ்வராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர். இக்கோவிலுக்கு மற்றொரு குறிப்பிட்ட அம்சமும் உண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் ஒருங்கே கொண்டு சிறந்த புண்ணியதலமாக விளங்குகிறது.

 இவ்வாலயத்தில் ஈசன் கிழக்கு பார்த்திருப்பதும் அம்மன் தெற்கு பார்த்திருப்பதும், சித்திரை 7,8,9 தேதிகளில் மட்டும் சூரியன் உதயம்; ஆகும்போது சூரியன் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது மட்டும் விழும் அமைப்புடன் வடக்குபுற வாசல் அமைப்பு கொண்டு கட்டப்பெற்றதாகும்

இவ்வாலயத்தினை வேளாளர் மரபிலிருந்து தனிபட்ட குடும்பத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக, பரம்பரை தர்மகர்த்தா நிர்வாகத்தின் கீழ் நிர்வாகிக்கும் ஆலயம் ஆகும்.

நெஞ்சில் நீதியும், செயலில் நேர்மையும், வாக்கில் துணிவும் கொண்டவர்களுக்கு எந்நாளும் நலமே அருளும் சனிபகவான், இங்கு வந்து வணங்குபவர்களுக்கு நலமும், வளமும் அருள பிரார்த்திக்கிறோம். ஈசனை சரணாகதி அடைந்த எவருக்கும் நவகிரகங்கள் எதுவும் செய்வதில்லை. அதைத்தான்

'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.'

என்று கோளறு பதிகமும் தெரிவிக்கிறது. இன்று பெயர்ச்சி அடைந்த சனிபகவான் எல்லோர் வாழ்விலும் நன்மை புரியட்டும்.

இது பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் 2 கி.மீ தொலைவில் அமைந் துள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

அன்பே சிவம்...சிவமே அன்பு....

திருச்சிற்றம்பலம்

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்