ALL VIDEO NEWS ஆன்மீகம்
சப்த விடங்க தலங்கள்: திருவாரூர் பகுதி 1
September 14, 2020 • Dharmalingam

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.

 

இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும்.

இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன.

விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும் இந்திரனிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு.

இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது

சப்தவிடங்கத்தலங்கள் குறித்து தனிப்பாடல் ஒன்று உள்ளது.

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம் 
சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.
  • திருவாரூர் - தியாகராசப்பெருமான்
  • திருநள்ளாறு - நாகவிடங்கர்
  • நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
  • திருக்காராயில் - ஆதிவிடங்கர்
  • திருக்குவளை - அவனிவிடங்கர்
  • திருவாய்மூர் - நீலவிடங்கர்
  • வேதாரண்யம் - புவனிவிடங்கர்
திருவாரூர் -தல வரலாறு :
 
பாற்கடலில் படுத்திருந்த போது பெருமாள் தமது மார்பு மீது தியாகராஜர் சிலையை வைத்திருந்தாராம். வெகு காலத்திற்குப் பிறகு அந்தச் சிலையை இந்திரன் வாங்கிக் கொள்கிறான்.
 
இந்திரனுக்கு ஒரு போரில் உதவும் முசுகுந்தச் சக்ரவர்த்தி தனக்கு பிரதியுபகாரமாக இந்திரனிடமிருக்கும் தியாகராஜர் சிலையைக் கேட்கிறார். முதலில் ஒத்துக் கொள்ளும் இந்திரன் ஆனால் முழுச் சம்மதமில்லாமல் தியாகராஜரைப் போலவே சிலை ஒன்றைச் செய்து அதைத் தந்துவிடுகிறார்.
 
இப்படி ஆறு முறை ஏமாற்றி ஏழாவது முறையாகத்தான் திருவாரூரில் இருக்கும் தியாகராஜர் சிலையை முசுகுந்தனிடம் இந்திரன் வழங்குகிறார்.
 
திருவாரூரைச் சுற்றிலும் ஆறு இடங்களில் அந்தச் சிலைகள் நிறுவப்பட்டு கோவில்களாகியிருக்கின்றன. திருவாரூரில் இருப்பது மூலம். அதனால் இந்த ஊரை மூலாதாரம் என்கிறார்கள். ஏழு இடங்களையும் சேர்த்து சப்தவிடங்கம் (சப்த-ஏழு) என்று பேர்.
 
இப்படி சிலையை வாங்கி வைத்தால் போதுமா? சிவனை அழைக்க வேண்டுமல்லவா? அதற்காக கோவிலின் பக்கத்தில் இருக்கும் பெரிய குளத்தின் (கமலாலயம்) மேற்குக் கரையில் இருக்கும் யக்னேஸ்வரர் ஆலயத்தில் வைத்து யாகங்களைச் செய்து சிவனை அழைத்து வந்தார்களாம். 
 
கடவுளின் சிலைகளுக்கு வெகு அருகாமையிலேயே அமர்ந்து கொள்ளலாம். கோவிலில் இருக்கும் தியாகராஜர், வன்மீகநாதர், கமலாம்பாளைக் காட்டிலும் அந்தக் கோவிலின் சில சூட்சமங்கள் நம்மைக் கிளரச் செய்வன. வன்மீகநாதர்தான் பழைய சிவன். மூலவர். புற்றுக் கோவில் அது. பக்கத்திலேயே தியாகராஜருக்கும் சந்நிதி உண்டு. உற்சவர். தியாகராஜருக்கு ஏன் பக்கத்திலேயே சந்நிதி என்ற கேள்விக்கு ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள். 
 
கோவிலில் அசலேஸ்வரர் என்றொரு சிவன் சந்நிதி இருக்கிறது. செருந்துணை நாயனார் அந்தச் சந்நிதியில்தான் பூமாலை கட்டி சிவனுக்கு அணிவிப்பார். ஒரு சமயம் கழற்சிங்க நாயனார்- இவர் ஒரு மன்னர். தனது மனைவியுடன் கோவிலுக்கு வருகிறார்.
 
மனைவி சங்காதேவி ஒரு மலரை எடுத்து நுகர்ந்துவிடுகிறார். செருந்துணையாருக்கு கனகோபம் வந்துவிடுகிறது. சிவனுக்கு வைக்க வேண்டிய மலரை நீ நுகர்ந்து பார்ப்பதா? என்று அவளது மூக்கை அறுத்துவிடுகிறார்.
 
கழற்சிங்க நாயனார் தன் பங்குக்கு வாளை உருவி ‘முதலில் மலரை எடுத்தது கரம்தானே’ என்று அவளது கரத்தை வெட்டிவிடுகிறார். இரண்டு பேருமே அறுபத்து மூன்று நாயன்மார்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டவர்கள். 
 
நமிநந்தி அடிகள் என்றொரு இன்னொரு நாயனார் கதையும் இதே கோவிலில்தான் நடந்திருக்கிறது. அவர் விளக்கு ஏற்றுவதற்காக எண்ணெய் கேட்டுச் சமணர்கள் வீடுகளுக்குச் செல்கிறார்.
 
அவர்கள் ‘உங்க சாமிக்கு தண்ணியில் விளக்கு ஏத்து’ என்று சொல்லிவிட இவருக்கு ஒரே வருத்தம். அசலேஸ்வரனை வணங்க, ‘நீ ஏன் தம்பி கவலைப்படுற? சங்கு தீர்த்தத்தில் தண்ணீரை எடுத்து விளக்கை ஏற்று’ என்று சொல்லிவிட்டார்.
 
நமிநந்தியடிகளும் அவ்வாறே தண்ணீரில் விளக்கு ஏற்றி நாயனார்களில் ஒருவர் ஆகிவிட்டார். சமணர்கள் வில்லனாகிவிட்டார்கள்.
 
இன்னமும் சில நாயன்மார் கதைகள் திருவாரூரை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. 
 
நாளை  தொடரும்.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்

ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்