ALL VIDEO ஆன்மீகம் NEWS
கீழடியில் முதுமக்கள் தாழி!
June 6, 2020 • Dharmalingam

 

கீழடியில் மண்டை ஓட்டுடன் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி!

கீழடி கிராமம் (Keezhadiதமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின்கீழடி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும் மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம்பரிபாடல்மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40ற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.

கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. மதுரை காமராசர் பல்கலைகழக உயிரியல் துறையில் பணியாற்றி  ஓய்வு பெற்ற  பேராசிரியர் பிச்சப்பன், தொல்லியல் அலுவலர் பாஸ்கரன், ரமேஷ் உள்ளிட்ட தொல்லியல் துறையினரால் இந்த அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அகழாய்வு நடத்தப்படும் நிலத்தின் அருகே உள்ள தனது நிலத்தில், கதிரேசன் தென்னை கன்று நடுவதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது தாழி ஒன்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நேரில்  சென்று தாழியை ஆய்வு செய்தனர். அதில் மண்டை ஓடு, எலும்புகள் இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.  தற்போது கிடைத்த தாழி, மண்டை ஓடுகளை ஆய்வு மையத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் அதன் பின்னரே எவ்வளவு பழமையானது என்பது தெரியவரும் என்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.