ALL NEWS ஆன்மீகம் VIDEO
கழறிற்றறிவார் நாயனார் ( பகுதி 4)இன்று குருபூஜை ஆடி மாதம் சுவாதி
July 28, 2020 • Dharmalingam

கழறிற்றறிவார் நாயனார் ( பகுதி 4)

சேரமான் பெருமான் நாயனார்

நமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம்  ஒரு நாயனார்

சுந்தரரும் சேரரும் காவிரிக் கரையோரமுள்ள சிவக் கோவில்களை வழிபட்டவாறு திருக்கண்டியூர் என்னும் தலத்தை அடைந்து, எம்பெருமானை வணங்கி வழிபட்டு வெளியே வந்தனர். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்திருந்த திருக்கண்டியூர் தெய்வத்தைத் தரிசித்தனர்.

இரு ஞானச் செல்வர்களும், வடகரையில் அமைந்திருக்கும் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் ஐயாற்றுப் பெருமானை வழிபட்டு வர எண்ணினர். அவர்கள் உள்ளத்தில் பக்திப் பெருக்கெடுத்து ஓடியதுபோல், காவிரியிலும், ஓடங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இரு ஞானமூர்த்திகளும் திகைத்து நின்றனர்.

சுந்தரமூர்த்தி நாயனார் கண்டியூர் நீலகண்டப் பெருமானைப் பணிந்து பரவும் பரிசு எனத் தொடங்கித் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதிதோறும் ஐயாருடைய அடிகளோ என்று அன்பு மேலிட அழைத்தவராய்த் திருப்பதிகத்தினைப் பாடினார். சிவபெருமான் திருவருளால் காவிரி நதி பிரிந்து அருட்செல்வர்களுக்கு வழி காட்டியது.

இருவரும் அவ்வழியாக அக்கரை சென்று ஐயாற்றுப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் வடகரையை அடைந்து தங்கள் சிவயாத்திரையைத் தொடர்ந்தனர்.

மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்ட இருவரும் பல தலங்களைத் தரிசித்தவாறு கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தனர். மலைநாட்டு மக்கள் தங்கள் அரசரையும், ஆரூர்ப் பெருமானையும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.

மலைநாட்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்த ஆரூரர், சேரமான் பெருமான் நாயனாருடன், கொடுங்கோளூரை வந்தணைந்தார். அரசரையும், சுந்தரரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான அன்பர்களும், அடியார்களும் கூடினர். சேரமான் பெருமான் நாயனார் சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக் களம் ஆலயத்துள் சென்றார்.

இரு தவச் செம்மல்களும் திருசடைப் பெருமான் திருமுன் பக்திப் பிழம்பாக நின்று கொண்டிருந்தார்கள். சுந்தரர், முடிப்பது கங்கை எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். சேரர் பெருமான் சுந்தரரோடு புறத்தே வந்து, அலங்காரமாக நிறுத்தப்பட்டிருந்த யானை மீது அவரை எழுந்தருளச் செய்தார். தாமும் கூடவே எழுந்தருளினார். வெண் சாமரங்களை வீசிக்கொண்டு, திருமாளிகைக்குப் புறப்பட்டார்.

தம்பிரான் தோழரும், அத்தோழருக்குத் தோழரும் உலா வந்த காட்சியைக் கண்டு நகர மக்கள் வாழ்த்திப் பணிந்தனர்; மலர் தூவி வணங்கினர். இங்ஙனம் விண்ணவர் வியக்குமளவிற்குத் திருக்கோலம் வந்த இரு தவச் செம்மல்களும் திருமாளிகையின் மணிவாயில் வழியாக அரண்மனை வந்தனர்.

சேரர் பெருமான் சுந்தரரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று தமது அரியணையில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைச் சிவாகம முறைப்படி வழிபாடு புரியத் தொடங்கினார். சுந்தரர் இது செய்தல் தகாது என்று தமக்கு பாதபூசை புரிய வந்த சேரரைத் தடுத்தபோது சேரமான் பெருமாள், அன்பின் மிகுதியால் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும், ஏற்று அருளல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சுந்தரர் அவரது அன்பிற்குக் கட்டுப்பட்டார். அவரோடு திருவமுது செய்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரப்பெருந்தகையுடன் அரண்மனையில் தங்கியிருந்தார்.

சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் இருந்து வரும் நாளில் அவருக்குத் திருவாரூர்ப் பெருமானின் நினைவு வரவே அப்பொழுதே புறப்பட்டார்.

சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். இருப்பினும் சுந்தரர் விருப்பத்திற்கு ஏற்ப அவரது பயணத்தைத் தடுக்க விரும்பவில்லை.

அவரது விருப்பம்போல் அரசு கட்டிலில் அமர்ந்தார். சேரமான் பெருமாள், சுந்தரர்க்குப் பொன்னும் பொருளும் மணியும் பலவகையான பண்டங்களையும் கொடுத்து அவரது திருவடிப் பணிந்து எல்லைவரைச் சென்று தொண்டர்களுடன் வழி அனுப்பி வைத்தார்.

திருவாரூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சுந்தரர், மிக்க சிரமத்துடன் ஒருவாறு திருமுருகன் பூண்டி என்னும் இடத்தை நெருங்கினார்.

களைப்பு மேலிடத் தொண்டர்களுடன் ஓரிடத்தில் தங்கினார். எம்பெருமான், தம்முடைய பூதகணங்களை வேடுவர் உருவில் அனுப்பி, நாயனார் கொண்டு வரும் பொருள்களை எல்லாம் கவர்ந்து கொண்டு வரச் செய்தார்.

சுந்தரர்க்கு வேதனை மேலிட திருமுருகன்பூண்டியை அடைந்து அங்கு குடிகொண்டிருக்கும் எம்பெருமானிடம் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

எம்பெருமான் சிவகணங்கள் மூலம் கவர்ந்து வந்த பொருள்களை எல்லாம், கோயிலின் முன்னே மலைபோல குவிக்கச் செய்தார். சுந்தரர் அகமகிழ்ந்தார். தொண்டர்களுடன், பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வணங்கி வழிபட்டு, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார் சுந்தரர்!

குருபூஜை

கழறிற்றறிவார் நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கொடைக் கழறிற்றறிவார்க்கு அடியேன்.

இதுப்போன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.