ALL ஆன்மீகம் NEWS VIDEO
கருப்புச்சட்டை அணிந்து கண்டன முழக்கம் எழுப்பியீர் வைகோ அறிக்கை
May 6, 2020 • Dharmalingam • NEWS

*மே 7: கறுப்புச் சட்டை அணிவீர்; கண்டன முழக்கம் எழுப்புவீர்!*

*வைகோ அறிக்கை*

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சமூகப் பரவலாகி, பெரும் ஆபத்தில் சிக்கி இருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசின் நிர்வாகக் கோளாறும், பொறுப்பற்ற நடவடிக்கைகளும் காரணம் ஆகும்.

கடந்த மார்ச் 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து எச்சரிக்கை செய்தார். மீண்டும் மார்ச் 21 ஆம் தேதி கொரோன தொற்றுச் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார். ஆனால் தமிழக அரசு எதிர்க்கட்சித் தலைவரின் எச்சரிக்கைகளை புறந்தள்ளியது மட்டுமின்றி, கொரோனா பேரிடரை பெரும் குழப்பத்துடனும் அலட்சியப் போக்குடனும் கையாண்டதால், இன்று மக்கள் அச்சத்தில் உறையும் நிலைமை உருவாகி இருக்கிறது.

மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும், அதன் பிறகு இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கையும் மக்கள் கடைப்பிடித்து வந்தபோது, திடீரென்று சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். எவ்வித முன்தயாரிப்புகள் இன்றி, தமிழக அரசு அறிவீனமான முறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் மக்கள் பதற்றமடைந்து, ஏப்ரல் 25 ஆம் தேதி கடைகளில், சந்தைகளில் அணை உடைத்து வெள்ளம் பாய்ந்தது போல குவியத் தொடங்கினர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊரடங்கில் வீடுகளுக்குள் முடங்கி இருந்த மக்களைத் தெருவுக்கு வரவழைத்ததன் விளைவு, கோயம்போடு என்பது தமிழ்நாட்டின் ‘வூகான்’ போல இன்று கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறுவதற்கு வழி கோலிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி அரசின் படு மோசமான நிர்வாக நடவடிக்கைகளால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலாகி விட்டது.

இந்நிலையில், மேலும் தமிழ்நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடும் வகையில் மே 7 ஆம் தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை திறப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு அனுமதி வழங்கி இருப்பது மேலும் மேலும் கொரோனா கொள்ளை நோய் காட்டுத் தீ போன்று பரவுவதற்குத்தான் வழி வகுக்கும். மதுக்கடையில் குவியும் குடிகாரர்களிடையே சமூக விலகல் கட்டுப்பாடு என்று எதுவும் காதில் விழப்போவது இல்லை. கொரோனா தொற்று அதிகரிப்பதையும் தடுக்கப்போவது இல்லை.

மக்களை பேராபத்தில் தள்ளி வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் பொறுப்பற்ற நிர்வாகச் சீரழிவைக் கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவைக் கண்டித்தும் மே 7 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு 5 பேருக்கு மிகாமல் கூடி, கறுப்புச் சின்னம் அணிந்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக 15 நிமிடங்கள் கண்டன முழக்கம் எழுப்ப வேண்டும்.

கொரோனா கொள்ளை நோய் பேரிடரைக் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கட்சி, அரசியல் எல்லைகளைத் தாண்டி தமிழக மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொதுமக்களும், கழகக் கண்மணிகளும் வீடுகளின் வாயில்களில் நின்று கறுப்புச் சின்னம் அணிந்து, விண்ணதிர கண்டன முழக்கம் எழுப்பி இந்த அறப்போர் இயக்கத்தை வெற்றி அடையச் செய்வோம்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.05.2020