ALL VIDEO ஆன்மீகம் NEWS
கண்ணப்ப நாயனார் - 1
July 17, 2020 • Dharmalingam

கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.

பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர் (முற்காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகும்). இவ்வூரில் வேட்டுவ சாதியினர் வாழ்வர்.

இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர்.

அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார்.

அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல முதலியாக்கினார்.

குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார்.

அவருடன் வேட்டுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று.

அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர்.

திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான்.

பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது.

பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். 'மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் சொன்னான்.

மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது.

மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. 

 

திருச்சிற்றம்பலம்

நாளை தொடரும்

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்  

 

 

 

 

 

 


"கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை