ALL ஆன்மீகம் NEWS VIDEO
உவமைக் கவிஞர்-சுரதா
June 19, 2020 • Dharmalingam

சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.

செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

கவிதை இயற்றல்

சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா.

அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார். திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன

1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

இவர் தன்னுடைய 84ம் வயதில் 19.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

தொகுப்பு மோகனா செல்வராஜ்