ALL VIDEO ஆன்மீகம் NEWS
உருத்திர பசுபதி நாயனார் வரலாறு
June 23, 2020 • Dharmalingam

 

“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை

பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர்.

திருத்தலையூர்  தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

சோழநாட்டிலே, திருத்தலையூரிலே, பிராமணகுலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளிலே பதிந்த அன்பே தமக்குச் செல்வமெனக் கொண்ட பசுபதி என்பவர் ஒருவர் இருந்தார்.

இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார்.

வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது; இவ்வாறு சிவதத்துவ விவேக விருத்தியிற் கூறப்பட்டது.

வேதபுருஷனுக்கு இந்த உருத்திரம் கண்ணும், இதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியுமாம்.

இவ்வுருத்திரத்தில் பகுப்பின்றி உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்தோதி வழிபாடு கூறுதல் ஏற்றுக்கெனின்;

எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க.

தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி - யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் - பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி - நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே" என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் .

சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர்.

 அவர் தாமரைத்தடாகத்திலே ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். அகோராத்திரம் கழுத்தளவினதாகிய தண்ணீரிலே நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் சிரசின்மேலேறக் குவித்து, பரமசிவனுடைய திருவடிகளை மறவாத சிந்தனையோடு வேதபுருஷனுக்குக் கண்ணாகிய ஸ்ரீ ருத்திரத்தை ஓதி வந்தார் .

தமது வாழ்நாளில்  வீணாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும் இரவென்றும் பகலென்றும் பாராமல் எந்நேரமும் உருத்திரத்தைப் பாராயணம் செய்வதிலே தம் பொழுதெல்லாம் கழித்தார்.ஐந்தெழுத்தை  நியமமாக ஓதி வந்தார் .

இது காரணம் பற்றியே இவருக்கு உருத்திர பசுபதியார் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

உருத்திர பசுபதியின் பக்தியைப் பற்றி ஊரிலுள்ளோர் அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணமாகவே இருப்பர். உருத்திர பசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்கிறது.  

இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.

குருபூசை நாள்:புரட்டாசி அசுவினி

  பக்தியுடன்  மோகனா செல்வராஜ்