ALL ஆன்மீகம் NEWS VIDEO
உயிரிழந்த முன்கள வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
August 8, 2020 • Dharmalingam

“கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்த முன்கள வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை - நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி - தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்” என்று  அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.

கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் மக்களின் உயிரை தினமும் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள் முன்களப் பணியாளர்கள்தான்.

இதனால், தமிழகத்தில் மருத்துவர், காவல்துறையினர், செவிலியர், தூய்மைப் பணியாளர் என்று ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் மீண்டுள்ளார்கள்; சிலர் மாண்டுள்ளார்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.