ALL VIDEO ஆன்மீகம் NEWS
உத்தரகோசமங்கை பகுதி 3
May 24, 2020 • Dharmalingam

உத்தரகோசமங்கை    பகுதி  3  : முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.

அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.

முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார். தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கையாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.  ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.

உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.

பக்தியுடன் நாளை தொடரும்

மோகனா செல்வராஜ்