ALL VIDEO ஆன்மீகம் NEWS
இல்லம் தேடி வரும் மகாலட்சுமி.
July 30, 2020 • Dharmalingam
வரலட்சுமி விரதம்  இல்லம் தேடி வரும் மகாலட்சுமி.
 
பூஜை செய்து நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம்

 
கோவில்களில் போய் பண்டிகைகளைக் கொண்டாடுவோம். சில பண்டிகைகளையும், விரதங்களையும் மட்டும் வீட்டிலேயே கொண்டாடுவோம்.
 
வரலட்சும் விரதம்: தமிழகத்தில் ஒரு சாரார் மட்டுமே கொண்டாடினாலும், ஆந்திரம்/ கர்நாடகத்தில், மிகப் பலரும் கொண்டாடுவது;
 
அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரதம்.
 
நாளை வரலட்சுமி விரதம்  31.07.2020 கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டினை அலங்கரித்து மகாலட்சுமியை நினைத்து விரதம் இருந்து கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்க நோன்புக்கயிறு கட்டி வணங்குவார்கள்.
 
இந்த விரதம் இருக்கும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்.
 
மனதிற்கு பிடித்த கணவன் அமைவார். அதே போல திருமணம் ஆன பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
 
மாங்கல்ய தோஷங்களும் நீங்கும். ஆண்டு தோறும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும்.
 
திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்

மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்!
 
சங்கு சக்ரதாரி நமஸ்காரம்!
சகலவரம் தருவாய் நமஸ்காரம்!
பத்ம பீட தேவி நமஸ்காரம்!
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்
 
 
 
வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, கோலம் இட்டு,அதன் மீது ஒரு வாழை இலையில் ஒரு படி அரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
 
பித்தளை அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு,நாணயங்கள், எலுமிச்சை பழம், கருகமணி இவை உள்ள போட வேண்டும். வாசனை பொருட்களும் போடலாம்.
 
இந்த கலசத்தின் வாய்பகுதியில் மாவிலை வைத்து அதன் மீது தேங்காய் வைக்க வேண்டும்.
 
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ(அ)வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம் வாசலுக்கு அருகில் அம்மனை இன்று வியாழக்கிழமை இரவே வைத்து விட வேண்டும் நாளை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
 
வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வர்யங்களை தந்து அருள்வாயாக!" என்று அம்மனை அழைத்து வந்து வீட்டில் கிழக்கு முகமாக வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு முகமாக அமர்ந்து பூஜிக்க வேண்டும். 

அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள்தான் இந்த வரலட்சுமி விரதம்.

வரலட்சுமி விரதத்துக்கு பலவிதமான புராணக் கதைகள் உண்டு. 

சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். 

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். 

அன்னைக்கு பல வகை சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு தனம், தான்யம், ஐஸ்வர்யம், சந்தான பாக்கியம், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுள், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று அன்னை பார்வதி அருளியிருக்கிறார்.
 
மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். மலர்களால், தீபங்களால் அம்பாளை ஆராதனை செய்து 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவரிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டி விடச் சொல்லி, சரடை கட்டிக் கொண்டு ஆசிர்வாதம் பெற வேண்டும்.
 
வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். 

மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

பூஜை செய்த அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ எளிமையான பூஜை செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய், பச்சரிசி வைத்து விட்டு மறு வெள்ளியன்று பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் செல்வச் செழிப்பு பெருகும், என்றும் நிறைந்திருக்கும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்