ALL ஆன்மீகம் NEWS VIDEO
இயற்பகை நாயனார் - நிறைவு
June 10, 2020 • Dharmalingam

 

அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார்.

உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார்.

பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர்.

எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.

மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார்.

அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’. என்றுகூறி விரைந்து வந்தார்.

மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தை விட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார்.

வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின் மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பலமுறை தொழுதார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார்.

அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர்.

அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து இன்புற்றனர். ஆக, இதுவே இயற்பகை நாயனார் அவர்களின் வரலாறாகும்.

நாளை மற்ற ஒரு நாயன்மார் வரலாறு

பக்தியுடன் மோகனா செல்வராஜ்