ALL NEWS ஆன்மீகம் VIDEO
இடங்கழி நாயனார் வரலாறு
June 21, 2020 • Dharmalingam

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.

சோழவளநாட்டின் குறு நாடான கோனாட்டில் கொடும்பாளூர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி செய்து வந்த சிவனடியார் இடங்கழியார்.

இடங்கழி நாயனார் தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார். கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார். 

சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார்.

இவர் காலத்தில் நாடெங்கும் சைவம் தழைத்தோங்கியது. இவரே நூறு சிவாலயங்களை எழுப்பி சிவ வழிபாட்டினை போற்றி வந்தார் என வரலாறு கூறுகிறது. சிவனடியார்களுக்காக நெல் திருடியவரை தண்டிக்காமல் நெற் களஞ்சியத்தையே திறந்து வைத்த மன்னர் குலத்தைச் சார்ந்தவர் இடங்கழி நாயனார்.

இவர் நாட்டில் வயதான சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் நாள்தோறும் சிவனடியாருக்கு மகேசுவர பூஜை செய்விப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நிலையில், பொருள் இன்மையால் இத்தொண்டை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார்.

அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, 'நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்' எனக் கேட்டார்.

அதுகேட்ட அடியவர், 'நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்' என்றார்,

நெல்லைத் திருடிய காரணத்தை அறிந்த மன்னர் இடங்கழி யாருக்கு, அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. அவரை விடுதலை செய்தார். நெல் பண்டாரமும், நிதிப் பண்டாரமும், அளித்தார்.

அதோடு, தன் நெற்களஞ்சியத்தை சிவனடியார்களுக்கு திறந்துவிட்டு, கொள்ளையடித்துச் செல்ல முரசு கொட்டி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். சிவனடியார்கள் நெல் கொண்டு செல்வதைக் கண்டு மகிழ்ந்தார்.

அதுகேட்டு இரங்கிய மன்னர், 'எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க' என எங்கும் பறையறிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் கொடும்பாளூர் திருத்தலம் அமைந்துள்ளது. இன்றைய கொடும்பாளூர் பழைமையான வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட ஊராகும்.

ராஜராஜ சோழனின் தாயார் பிறந்த ஊர். சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரைக் கொண்ட மூவர் கோயில்,

பஞ்சமூர்த்திகள் கொண்ட ஐவர் கோயில், முதுகுன்றீசர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், நந்தியின் வடிவில் தனி நந்தி விளங்கும் தலம், சிதம்பரம் கருவறை கூரைக்குத் தங்கத்தை உபயமாக வழங்கிய தலம், கோனாட்டின் தலைநகரம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலம் கொடும்பாளூர்.

அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

குருபூஜை வரும் (ஐப்பசி மாதம்- கார்த்திகை நட்சத்திரம்)

திருச்சிற்றம்பலம்.

நாளை  -  பக்தியுடன் மோகனா செல்வராஜ்