ALL ஆன்மீகம் NEWS VIDEO
அருள்மிகு ஶ்ரீ திருவல்லீஸ்வரர் கோவில் -பாடி குருத்தலம் கோவில்
August 4, 2020 • Dharmalingam

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. 

திருவல்லீஸ்வரர் கோவில் பாடியில் உள்ளது.

மூலவரின் பெயர் திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப் படுகிறார். அம்மனின் பெயர் ஜெகதாம்பிகை.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 254 வது தேவாரத்தலம் ஆகும்.  

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21வது தலம்.

பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 

இக்கோவில் சுமார் 1000-2000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் முதலியோரால் பாடல் பெற்ற ஸ்தலாக உள்ளது.

 மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார்.

அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இதனால், இது “குருத்தலம்” என்றும் அழைக்கப் படுகிறது.

குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு.

இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. 

வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள்பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது.

“இவ்வூர் இறைவனை திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். அக்காலத்தில் இவ்வூர் திருவலிதாயம் என வழங்கப்பட்டது. பின்னர் 12-13 நூற்றாண்டுகளில் திருவல்லிதாயம் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கல்வெட்டுகள் இறைவனை உடையார் திருவல்லிதாயமுடைய நாயனார் என்று கூறுவதுடன் இன்னாரயனார் தேவதானமாகிய பாடியில் என்று கூறுகின்றது.

ஆனால் 14ம் நூற்றாண்டின் இறுதியிலும், 15ம் நூற்றாண்டு தொடக்கத்திலும் வாழ்ந்த விஜயநகர மன்னன் வீர அரிநாயர் கல்வெட்டு ஒன்றில் பாடிதேவதாயத்தின் உடையார் திருவல்லிதாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டினை சார்ந்த மன்னன் மற்றொரு நாட்டு மன்னனோடு போர் தொடுத்துச் செல்லும் போது, தமது படைகள் தங்குவதற்கென்று ஓர் இடத்தை ஏற்பாடு செய்து அங்கு தங்கியிருப்பது வழக்கம். இந்த மாதிரி இடங்களை பாடிவீடு என்று குறிப்பிடுவார்கள்.

மேற்கூறியவற்றுள் இந்த பாடி என்ற ஊரின் பெயர் போர்க்கால பாடி வீட்டில் அடிப்படையில் எழுந்திருக்கலாம். சோழ மன்னர்களும், விஜய நகர மன்னர்களும் இவ்வூரை பாடிவீடாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

இதற்கு சிறந்ததொரு சான்றாக படைவீட்டு அம்மன் விளங்குகிறது. படைவீரர்கள் போருக்குச் செல்லும் முன் வீரதேவதையாகிய காளியை வணங்கிச் செல்வது வக்கம். வெற்றி பெற்றால், அவ்வீரர்களே தங்கள் தலையை அரிந்து காணீக்கையாக வழங்குவதும் வழக்கிலிருந்தது. அத்தகைய “படைவிட்டு அம்மன்” என்றும் அதுவே பேச்சு வழக்கில் படவடம்மன் என்றும் இன்றும் உள்ளது

குறிப்பிட்டதாகும். எனவே இவ்வூர் முற்றுகையின் போது தங்கியிருக்கப் பயன்படுத்தப்பட்ட பாடிவீடாகவே இருந்திருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் உழல் கோட்டத்து அம்பத்தூர் நாட்டுத் திருவல்லிதாயம் என்று பழங்கல்வெட்டுகள் இவ்வூர் அமைவு பற்றிக் கூறுகின்றன.

நாங்கானை மாடவடிவில் அமைந்துள்ள இவ்வழகிய கோவில் மூன்றாம் ராஜராஜன் காலத்தைச் சேந்ததாக இருக்கலாம். கோவில் முன்பு செங்கற்களியாக இருந்து, பின்னர் ராஜராஜன் கருங்கற்களியாக மாற்றப் பட்டிருக்க வேண்டும்.

கருவறை அர்த்தமண்டபம் வரை இவண் காகாலப்பாணியாக உள்ளன. சிற்பங்களும் இதற்குச் சான்று பகர்கின்றன. முகமண்டபமும் அம்மன் சன்னதியும் காலத்தால் பிற்பட்டவை. இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய சுவருடன் விளங்குகிறது.

இக்கொவிலில் சுமார் 15 கல்வெட்டுகள் உள்ளன. அர்த்த மண்டப தெற்குப்புறமுகத்தில் உள்ள மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு சேட்திர அருளிவித்ததைத் தெரிவிக்கிறது.

மற்றொரு கல்வெட்டு பரத்வாஜி திருவிடையான் திரு ராபீசுரமுடையர்களான திருப்பதியில் விண்ணப்பம் செய்யும் திருச்சிற்றம்பலமுடையான் ஆல்ரயலிங்கமாக எழுந்தருளிவித்த நாயனார் அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனார்க்குப் பூசை அமுது படிக்கு நற்காசு பத்து அளித்துள்ளதைக் கூறுகிறது.

மதுராந்தக பொத்தப்பி சோழனுடைய கல்வெட்டில் திருவலிதாயத்து ஊரவர் தங்களூரில் உள்ள இறையிலி தேவதானங்கள் நீக்கி ஊர் முழுவதையும் ஸர்வமான்யமாகக் கொடுத்ததைக் காணமுடிகிறது.

இங்கிருக்கும்  ஆண்டவனை  வழிபட்டால்  கிடைக்கும்  பலன்: ஆக மிகப்பழமையும் பெருமையும் வாய்ந்த இவ்விறைவன் புகழ் வெள்ளிடைமலை.

இந்த இறைவனை வணங்கினால் பல நன்மைகள் நம்மை வந்தடையும் என்கிறார் ஞானசம்பந்தர். “சித்தம் வைத்த அடியார் அவர் மேல் இடர் நோய் யாவும் அடையாது இந்த இறைவனை நினைத்தால் வினை தீர்ந்து நலம் உண்டாகும்,

உடலில் இயங்கும் உயிர் உள்ளளவுத் தொழ உள்ளத்துத் துயர் போகும், குற்றம் தீர அடியார்க்கு அருள் செய்து அருள்பவன்”, என்ற அவரின் அருள்வாக்குப் படி பக்தர்கள் திருவலிதாய முடையாரை வணங்கி நன்மை பெறுவார்களாக, என்று அந்த கல்வெட்டில் உள்ளது.

இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பத்தரொடு பலரும் பொலியம் மலர் அங்கைப்புனல் தூவி

ஒத்தசொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர்சென்னி

மத்தம்வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்

சித்தம்வைத்த அடியார் அவர்மேல் அடை யாமற்று இடர்நோயே

இக்கோவில் காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30 இரவு மணி வரை திறந்திருக்கும். 

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
 
எப்படிப் போவது:
 
சென்னை – ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

அன்பே சிவம்...சிவமே அன்பு....

திருச்சிற்றம்பலம்

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்