ALL VIDEO NEWS ஆன்மீகம்
அரிவாட்டாய நாயனார் நிறைவு
June 17, 2020 • Dharmalingam

“அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

"இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே" என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார். அப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. 

தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வ்ந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார்.

சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, "நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு" என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார்

இந்நாயனார் குடும்பத்தோடு கூடி இருந்தும், தமக்கு உறவு சிவனே என்னும் மெய்யுணர்வு உடையராகி அவரது திருவடிக்கணன்றித் தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி வாசனை மாண்டு நின்ற பெருந்தன்மையினர் என்பது ஈண்டுக் கூறிய இவரது செயற்கருஞ் செய்கையினாலே பொள்ளெனப் புலப்படுகின்றது.

இப்பெருந்தன்மை, "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டி யறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதே நாம்'.' எம். "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் - வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லி - லகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்காணையா - சகமார்க்கத் தாலன்றே தான்". எம். திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க.

இவரது இடையறாத இம்மெய்யன்பினால் அன்றோ, பிரம விட்டுணுக்களும் காண்டற்கரிய பரமசிவன் கமரினின்றும் இவரது அரிவாள் பிடித்த கையைத் தடுத்தற்பொருட்டு உயர வீசிய தமது திருக்கரத்தையும் இவரது வியாகுலத்தை ஒழித்தற் பொருட்டுத் தாம் அமுது செய்தலால் ஆகும் ஓசையையும் தோற்றுவித்து, பின்னர் இடபாரூடராய் வெளிப்பட்டு, இவருக்கும், எத்துணை வறுமை எய்திய வழியும் சிறிதும் மாறுபடாது இவர் கருத்தின்வழி நின்ற மனைவியாருக்கும், முத்தி கொடுத்தருளினார்.

ஆதலால், சிவனது வியத்தி ஸ்தானங்களாகிய குரு லிங்க சங்கமங்களுக்கு வறுமையினும் தம்மால் இயன்றது சிறிதேனும் அன்போடு கொடுத்தல் புண்ணியமும், கொடாமை பாவமுமாம் என்பது துணிக. ஒன்றும் கிடையாதாயினும்; பச்சிலையாயினும் கிடையாததா! அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ! அரிது அன்றே! இது "பரமன்றிருமுன் னழன்முன்னும் பரம குரவன்றிரு முன்னு - மொருமை யுறவே வறுமையினு முதவா தவருஞ் சிறிதேது - மரிது பொருடான் பச்சிலையு மரிதோ வஃது மரிதாயிற்றிருண மதனைத் திருமுன்னே மாற்ற லரிதோ செயலாலே" எனச் சிவதருமோத்தரத்தில் கூறுமாற்றால் உணர்க.

அந்தத் தாயனாரென்பவர் "இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே" என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று.

திருச்சிற்றம்பலம்     ஓம் நமசிவாய

நாளை மற்ற ஒரு நாயன்மார் வரலாறு

பக்தியுடன் மோகனா செல்வராஜ்