ALL ஆன்மீகம் NEWS VIDEO
அமர்நீதி நாயனார் நிறைவு
June 15, 2020 • Dharmalingam

 

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார்.

பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை.

அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.

அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில்  உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார்.

அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார்.

அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் 'நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.
அல்லிமென் முல்லையந்தார்.

அமர்நீதிக்கடியேன் – திருத்தொண்டத்தொகை

இறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அதன் பின்னாகவே இக்கருமத்தைச் செய்யும், தில்லைவாழந்தணரை நம் தலைவராகக் கொள்ளுதல் நன்று,

அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ? அவர்தம் உடைமையே அனைத்துமென்று அவர் வேண்டுவதெல்லம் இல்லையென்னாது கொடுப்பதும் (இயற்பகை) அவரை மகேசுவரராகப் பூசித்தலும் (இளையான் குடிமாறர்)அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் (மெய்ப்பொருள் நாயனார்) இறைவனைத் தொழமுன் அவர்களைக் கும்பிடுவதும் (விறன்மிண்டர்) ஆதிய இவையெல்லாம் எதற்கு. என்பர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது.

வேதப் பொருளான சிவனும் சிவனடியார்களும் ஒரே நிறை என்பதே அவ்விடை.

அமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம். ( 27/06/2020)

திருச்சிற்றம்பலம் - 

நாளை மற்ற ஒரு நாயன்மார் வரலாறு

பக்தியுடன் மோகனா செல்வராஜ்