ALL VIDEO NEWS ஆன்மீகம்
அப்பூதி அடிகள் நாயனார் - 2
June 12, 2020 • Dharmalingam

அதுமட்டுமல்ல அவரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளுக்கும், குளங்களுக்கும் இந்தப் பெயரையே சூட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார்.

திருநாவுக்கரசருக்கு இவற்றையெல்லாம் கேட்டு மீண்டும் அவர்களிடம் அப்பூதி அடிகள் யார்? அவர் எங்குள்ளார் ! என்று கேட்டார். அவர்கள் அப்பரடிகளை அழைத்துக்கொண்டு அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு புறப்பட்டனர். சிவநாம சிந்தையுடன், இல்லத்தில் அமர்ந்து இருந்த அப்பூதி அடிகள் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கும் அடியவர்களின் திருக்கூட்டத்தைக் கண்டார்.

சிவனடியார் எவரோ தமது இல்லத்திற்கு எழுந்தருளிகின்றார் என்பதறிந்து, அப்பூதி அடிகள் வாயிலுக்கு ஓடிவந்தார். இரு கரங்கூப்பி வணங்கினார். நாவுக்கரசரும் அவர் வணங்கும் முன் அவரை வணங்கினார். அடியார்களை வழிபடும் முறையை உணர்ந்திருந்த அப்பூதி அடிகளார் நாவுக்கரசரை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச் செய்தார்.

சுவாமி! தாங்கள் இந்த எளியோன் இல்லத்திற்கு எழுந்தருளியது எமது தவப்பயனே! அருள்வடிவமான் அண்ணலே! அடியார்க்கு யாம் ஏதாவது பணி செய்தல் வேண்டுமோ? என்று உளம் உருக வினவினார். ‌திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு வருகிறேன். திங்களூர் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்தேன்.

வரும் வழியே உங்களால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டேன். அங்கு இளைப்பாறினேன். பின்னர், தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தாங்கள் அறத்தில் சிறந்தவர்; அடியாரைப் ப‌ோற்றும் திறத்தில் மேம்பட்டவர்; சிறந்த பல தர்மச் செயல்களைச் செய்து வருபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டேன்.

உடனே தங்களைப் பார்த்துப் போகலாம் என்று வந்தேன். தங்கள் சித்தம் என் பாக்கியம் தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களுக்கும், சாலைகளுக்கும், குளங்களுக்கும் தங்கள் பெயரை இடாமல் மற்றொருவர் பெயரை வைத்திருப்பதன் உட்கருத்து‌ யாது என்பதனை யாம் அறிந்து கொள்ளலாமா ?

மற்றொருவர் பெயர் என்று அடியார் சொன்னதைக் கேட்டு மனங்கலங்கினார் அப்பூதி அடிகள். அப்பர் சுவாமிகளின் பெருமையை உணராமல் இந்த அடிகள் இப்படி ஒரு அபச்சார வார்த்தையை மொழிந்து விட்டாரே என்பதை எண்ணிச் சற்று சினம் கொண்டார். அவர் கண்களிலே கோபமும், துக்கமும் கலந்து தோன்றின. வாய் நின்றும் வார்த்தைகள் சற்று கடுமையாகவே வெளிப்பட்டன.

அருமையான சைவத்திருக்கோலம் பூண்டுள்ள தாங்களே இப்ப‌டியொரு கேள்வியைக் கேட்கலாமா? யார் நீங்கள்? எங்கு இருக்கிறீர்கள்? ‌யாது உம் தரம்? யாது உம் பூர்வாங்கம்? சொல்லுமிங்கே!. தேவரீர் சினம் கொள்ளக் கூடாது. தெரியாததால் தானே கேட்டேன்?நன்று நன்று ! உம்மொழி நன்று ! திருநாவுக்கரசரையா யார் என்று கேட்டீர் ? சமணத்தின் நாசவலையிலே நெறி இழந்த மன்னனுக்கு அறிவொளி புகட்டியவர் ! சைவத்தின் சன்மார்க்க நெறியை உலகோர்க்கு உணர்த்தியவர் !

இறைவன் திருவடியின் திருத்தொண்டால் இம்மையிலும் வாழலாம் என்ற உண்மை நிலையை மெய்ப்பித்து அருளிய ஒப்பற்ற தவசீலர் திருநாவுக்கரசர் ! அப்பெருமானின் திருப்பயெரைத்தான் யாம் எங்கும் சூட்டியுள்ளோம் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே !

கொந்தளி்க்கும் ஆழ்கடலிலே கல்லைக் கட்டிப் போட்டபோது, அதுவே தெப்பமாக மாற, கரை‌யேறிய கருணை வடிவானவரின் பெருமையை அறியாதவர் இந்திருவுலகில் யாருமேயிருக்க நியாயமில்லையே ! எம்பெருமானே! இப்படிக்யொரு ஐயப்பாட்டை இன்று கேட்க எம்புலன்கள் என்ன பாவம் செய்தனவோ ?

என் தேவருக்கு இப்படியொரு நிலை தங்களைப்போன்ற அடியார்களாலேயே ஏற்படலாமா ? என்றெல்லாம் பலவாறு ‌சொல்லி வருந்தினார் அப்பூதி அடிகளார்.

அடிகளார் தம் மீது கொண்டுள்ள வியக்கத்தக்க பக்தியையும், அன்பையும் கண்டு அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து, வேறு துறையாம் சமணத்திலிருந்து மீண்டு வருவதற்காக இறைவன் அருளிய சூலை ‌நோய் ஆட்கொள்ள, சைவம் அடைந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய நாவுக்கரசன் யானே! என்றார்.

திருச்சிற்றம்பலம் - நாளை  தொடரும்

பக்தியுடன் மோகனா செல்வராஜ்