ALL ஆன்மீகம் NEWS VIDEO
அப்பூதியடிகள் நாயனார் - நிறைவு
June 13, 2020 • Dharmalingam

அவரது பாதங்களைக் கழுவிய தூய நீரைத் தம் மீதும், தம் மனைவி மக்கள் மீதும் தெளித்துக் கொண்டார். தானும் பருகினார். நாவுக்கரசர் அவ்வடிகளின் அன்பிற்குக் கட்டுப்பட்டு உலகை‌யே மறந்தார்.

பிறகு திருநீற்றை எடுத்து அப்பூதி அடிகளுக்கும், அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அளித்தார். அடிகளும், அவர்தம் குடும்பத்தினரும் நெற்றி முழுமையும், மேனியிலும் திருநீற்றைப்‌ பூசிக் கொண்டார். அடிகள் நாவுக்கரசரிடம், ஐயனே! எமது இல்லத்தில் திருவமுது செய்து எமக்கு அருள் புரிய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி நின்றார்.

அங்ங‌னமே ஆகட்டும் என்று அடியாரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்தார் அப்பர் பெருமான் ! நாவுக்கரசர் சம்மதிக்கவே அகமகிழ்ந்துபோன அப்பூதி அடிகளும், அவர் மனைவியும், என்ன பேறு பெற்றோம் இங்கே அமுதுண்ண ஐயன் இசைந்தது. அம்பலத்தரசரின் திருவருட் செயலன்றோ இஃது என்று எண்ணி மகிழ்ந்தனர்.

அவரது மனைவி அறுசுவை அமுதிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். சற்று நேரத்தில் நால்வகையான அறுசுவை உண்டி தயாரானது. அப்பூதி அடிகளாரின் மனைவியார், பெரிய திருநாவுக்கரசிடம் வாழை இலை அரிந்து வருமாறு பணித்தாள்.

அன்னையாரின் கட்டளையை கேட்டு மூத்த திருநாவுக்கரசு தனக்கு இப்படியொரு அரும்பணியை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததே எனப்பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து இலை எடுத்துவரத் தோட்டத்திற்கு விரைந்தோடினான்.

பின்புறம் அமைந்திருந்த தோட்டத்திற்குச் சென்ற அக்குமாரன் பெரியதொரு வாழை மரத்திலிருந்து குருத்தை அரியத் தொ‌டங்கினான். அப்பொழுது வாழை மரத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்த கொடிய பாம்பு ஒன்று அச்சிறுவனின் கையை வளைத்துக் கடித்தது; பயங்கரமாக அலறினான். ‌கையில் பாம்பு சுற்றியிருப்பதைப் பார்த்ததும் அவசர அவசரமாக உதறித் தள்ளினான்.

பாம்பு கடித்ததைப்பற்றி அப்பாலகன் வருந்தவி்ல்லை. உயிர் போகும் முன் பெற்றோர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பற்றித்தான் கவலைப்பட்டான். தன்னைப் பாம்பு கடித்த விஷயத்தை எவரிடமாவது கூறினால் நல்லதொரு காரியத்திற்குத் தடையேற்பட்டு விடும் என்று ‌எண்ணி பேசாமல் தன் கடைமையைச் ‌செய்யக் கருதினான்.

அதுவரை விஷம் தாங்குமா என்ன? பாலகனின் உடம்பில் ஏறிய விஷம் சிறுகச் சிறுகத் தன் வேலையைச் செய்யத் தொடங்கியது. இலையும் கையுமாக வீட்டிற்குள்ளே ஓடினான். பெற்றோரிடம் இலையைக் கொடுப்பதற்கும் விஷம் உடலெங்கும் பரவி பாலகன் சுருண்டு விழுந்து உயிரை விடுவதற்கும் சரியாக இருந்தது. பெற்றோர்கள் ஒருகணம் துணுக்குற்றார்கள்.

மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட உணர முடியாத நிலையில்‌ சற்று நேரம் செயலற்று நின்றார்கள். நீலம் படிந்த மகனின் உடம்பைப் பார்த்ததும் பாம்பு கடித்து இறந்தான் என்பதை உணர்ந்தனர். பெற்றோர்கள் உள்ளம் பதைபதைத்துப் போயினர். அவர்கட்டு அலறி அழ வேண்டும் போல் இருந்தது. என்ன செய்ய முடியும் ? துக்கத்தை அடக்கிக் கொண்டனர்.

மகனின் உயிரைவிடத் தொண்டரை வழிபட வேண்டியதுதான் தங்களது முக்கியமான கடமை என்று மனதில் கொண்டனர். வந்திருக்கும் தொண்டருக்குத் தெரியாதவாறு மூத்த திருநாவுக்கரசரின் உடலைப் பாயால் சுற்றி ஒரு சூலையில் ஒதுக்கமாக வைத்தனர். ‌சோகத்தை அகத்திலே தேக்கி முகத்திலே சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டனர்.

தடுமாற்றம் சற்றுமின்றி, முகம் மலர அப்பூதி அடிகள், அப்பர் அடிகளை அமுதுண்ண அழைத்தார். அவர் தம் மலரடி‌களைத் தூய நீரால் சுத்தம் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார். ஆசனத்தில் அமர்ந்து அடிகளார் அனைவருக்கும் திருநீறு அளிக்கும்போது மூத்த திருநாவுக்கரசரைக் காணாது வியப்பு மேலிட, எங்கே உங்கள் மூத்த புதல்வன் என்று கேட்டார். அப்பூதி அடிகள் என்ன சொல்வது என்பது புரியாது தவித்தார். கண் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார்.

திருநாவுக்கரசர் திருவுள்ளத்தில் எம்பெருமானின் திருவருட் செயலால் இனந்தெரியாத தடுமாற்றம் ஏற்பட்டது. மூத்த மகனைப் பற்றி்க் ‌கேட்டதும் அடிகளார் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக்கண்ட நாவுக்கரசர் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மட்டும் குறிப்பால் உணர்ந்து கொண்டார்.

மீண்டும் மூத்த மகன் எங்கே ? என்று கேட்டபதற்குள் அப்பூதி அடிகளார், என் மூத்த மகன் இப்பொழுது இங்கு உதவான் என்று விடையளித்தார்.

அதைக் கேட்ட அப்பர் நீங்கள் என்னிடம் ஏதோ உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்கள் பதில் எதனாலோ என் உள்ளத்தில் திருப்‌தியைக் கொடுக்கவி்ல்லை என்றார். இவ்வாறு அப்பர் அடிகள் சொன்ன பிறகும் அப்பூதி அடிகளால் உண்மையை மறைக்க முடியவில்லை .

ந‌டந்த எல்லா விவரத்தையும் விளக்கமாகக் கூறினார். இம்மொழி கேட்டு மனம் வருந்திய அப்பரடிகள், என்ன காரியம் செய்தீர்கள் என்று அப்பூதி அடிகளை கடிந்து கொண்டே மூத்த திருநாவுக்கரசின பிணத்தைப் பார்க்க உள்ளே சென்றார். பார்த்தார்; திடுக்கிட்டார்; மனம் வெதும்பினார்.

உடனே இறந்த பாலகனை எடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு வருக என்று கூறியவாறு கோயிலுக்குப் புறப்பட்டார். அப்பூதி அடிகள் பாலகனைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். இச்செய்தி கேட்டு ஊர் மக்களும் திரண்‌டனர்.

திங்களூர் பெருமானை அப்பரடிகள் மெய் மறந்து உருகிப் பணிந்தார். ஒன்று கொல்லாம் என்னும திருப்பதிகத்தை நாவுக்கரசர் பாடினார்; ‌மெய்யுருகினார். நாவுக்கரசரின் பக்தியிலே பரமனின் அருள் ஒளி பிறந்தது.

மூத்த திருநாவுக்கரசு துயின்று எழுந்திருப்பவன் போல் எழுந்தான். அப்பரடிகளின் காலில் விழுந்து வணங்கினான். அப்பரடிகளின் மகிமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினார். அவரது பக்திக்கும், அருளுக்கும், அன்பிற்கும் தலைவணங்கி நின்றனர்.

ஆலயத்துள் கூடியிருந்து அன்பர் கூட்டம் அப்பர் பெருமானைக் கொண்டாடி போற்றியது. எல்லோரும் அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு வந்தனர். எல்லோரும் ஒருங்கே அமர்ந்து அப்பர் அடி‌களோடு சேர்ந்து அமுதுண்டனர்.

அப்‌பூதி அடிகள், நாவுக்கரசருடன் அமுதுண்ணும் பேறு பெற்றோமே என மகிழ்ந்தார். திருநாவுக்கரசர் சில காலம் அபபூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பின்னர் திருப்பழனம் பொழுது அப்பூதி அடிகளின் திருத் தொண்டினையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் ‌திருத்தொண்டு பல புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமானின் சேவடி நீழலை அடைந்தார்.

குருபூஜை: அப்பூதியடிகள் நாயனாரின் குருபூஜை தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திரு நம்பி அடியார்க்கும் அடியேன்.

திருச்சிற்றம்பலம் - 

நாளை மற்ற ஒரு நாயன்மார் வரலாறு

பக்தியுடன் மோகனா செல்வராஜ்