தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் (12-01-22)அன்று 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். நேரில் வந்து திறப்பதாக இருந்த இந்த நிகழ்ச்சி கொரோனா வைரஸ் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. இதனால் டெல்லியில் இருந்தபடியே பிரதமர் மோடி 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டில் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பிரதமர் மோடி உரை
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழியான தமிழில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சொந்த தொகுதியான வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்காக சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் அங்கு தமிழ் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும்.ஐ.நா சபையில் தமிழில் பேசியது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.
நம் நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது எனக் கூறிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 54% அதிகரித்துள்ளது எனவும், 2014-ம் ஆண்டு நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள்தான் இருந்தது எனவும் தற்போது நம் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கபட்டுள்ளது என்று கூறினார்.
அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு சார்பாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்பட்ட பின் முதல்முறையாக அரசு விழா ஒன்றில் பிரதமர் கலந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதற்கு காரணம் கிராமப்புற மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க முடிந்ததால்தான்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும்.மருத்துவ படிப்பில் ஏற்கனவே இருந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முன் நடத்தப்பட்டது போல சேர்க்கை அட்மிஷன் நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு வைக்கும் கோரிக்கைகளை இந்திய பிரதமரும், ஒன்றிய அரசும் நிறைவேற்றித் தர வேண்டும். தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு முதல்வரும் அமைச்சர்களும் தமிழ்நாட்டில் 'ஒன்றிய அரசு' என அழைத்து வருகிறது. இது தேசிய அளவில் கவனமும் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்றும் முதல்வர் ஸ்டாலின் பல முறை ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசியது கவனம் பெற்றது.
நிருபர் ராகவன்
🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏