டாஸ்மாக் பார்கள் திறப்பு குடிமகன்களுக்கு கொண்டாட்டம்
நவம்பர் 1-ந்தேதி (நாளை) முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை பார்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிப்படைத்த கொரோனா குறைந்து வந்தாலும் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படக்கவில்லை. தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன், அனைத்து மண்டல-மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர்ந்து மது அருந்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பார்களின் முகப்பில் கிருமிநாசினி வைக்கப்படவேண்டும். மது அருந்த வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து உள்ளே அனுப்பவேண்டும். முககவசம் அணியாதவர்களை அனுமதிக்கக்கூடாது.
அதுமட்டுமின்றி, 6 அடி சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் கோடுகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மதுக்கூடங்களுக்கு உள் நுழையவும் வெளியேறவும் தனித்தனி வழியை பின்பற்ற வேண்டும், கூட்டம் கூடுவது தடுக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிவதோடு, கொரோனா நோய் தொற்றின் அறிகுறி இல்லாத வாடிக்கையாளர்களை மட்டுமே மதுக்கூடங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். 55 வயதிற்கு கீழ் உள்ள பணியாளர்களை பணி அமர்த்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல் உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய, காலி மதுபாட்டில்களை சேகரிக்க பார்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 30-ந்தேதியுடனும், சில கடைகளுக்கு இம்மாத இறுதியிலும் (இன்று) முடிவுக்கு வந்துள்ளது.
ஒப்பந்தக்காரர்களுக்கு வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை அல்லது புதிய டெண்டர் இறுதி செய்யப்படும்வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறது. அரசு தேவையான உத்தரவை பிறப்பித்தாலோ, தளர்வுகள் அளித்தால் மட்டுமே பார்களுக்கான புதிய டெண்டர் கோரவேண்டும் என்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
நிருபர் பாஸ்கர்