காந்தி ஜெயந்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள்

 


        இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தேசத்தந்தை... பிறந்த தினம் இன்று..!!


!காந்தி ஜெயந்தி



🌟 காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளை கடைபிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என்று அறிவித்த ஐ.நா. சபை, காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007ஆம் ஆண்டு அறிவித்தது.


🌟 இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா?" எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.


🌟 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக 'ஆகஸ்ட் புரட்சி" என அழைக்கப்படும் 'வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தினை காந்தியடிகள் தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இவர் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மறைந்தார்.


*****


லால் பகதூர் சாஸ்திரி


👉 இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1904ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் எனும் ஊரில் பிறந்தார்.


👉 இவர் 1930ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். இவர் 1966ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மறைந்தார்.


*****


முக்கிய நிகழ்வுகள்


👉 1908ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தார்.


👉 1906ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா மறைந்தார்.



👉 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்தார்.


 

தொகுப்பு


மோகனா  செல்வராஜ்