*ஆடி அமாவாசை ஸ்பெஷல் !*
*தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்* *தான்என்றாங்கு*
*ஐம்புலத்தாறு ஓம்பல் தலை*
தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும் என்றுரைக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மூதாதையர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவர் இப்படி உணர்த்தி சென்றுள்ளார்.
இந்த முன்னோர் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அமாவாசை தினம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
*ஆடி அமாவாசையின் முக்கியத்துவம்...*
ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம்.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். அவ்வாறு இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று தினங்களில் அவசியம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வகையில் நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கூறும் வகையில் கொடுக்கப்படவேண்டிய தை அமாவாசை தர்ப்பணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
*எப்படி செய்ய வேண்டும்?*
மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி
மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை. அதேபோல இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. அவ்வாறு இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, புத்தாடை முதலானவற்றை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை மற்றும். உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.
மேலும் தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். அதேபோல பித்ரு பூஜையைச் முழுமனதோடு, முறையாக செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.
ஆடி அமாவாசையன்று, முன்னோர்களின் பெயரால் பிறருக்கும் உதவிடுவோம், முன்னோர்களின் ஆசிகளுடன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.
*ஆடி அமாவாசை விரத கதை!*
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.
*விரதம் சரி அது என்ன கதை?*
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, “உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்’ என்று கூறியது.
அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, “உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்’ என்ற குரல் கேட்டது.
இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விட
ிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்… அரற்றினாள்… தவித்தாள்… தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.
உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், “இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள்.
மகிழ்ந்த அம்பிகை, “ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்’ என சொல்லி மறைந்தாள்.
பக்தியுடன்
மோகனா செல்வராஜ்