தினம் ஒரு திருத்தலம்... எண்கோண வடிவம்... திருமண கோலத்தில் இறைவன்...!!
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்..!!
அமைவிடம் :
🌹 திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவேற்காடு தலத்தில் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்று விளங்குகிறது.
மாவட்டம் :
🌹 அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
🌹 சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இச்சிவாலயம் அமைந்துள்ளது.
கோயில் சிறப்பு :
🌹 இக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது.
🌹 சிவலிங்கத்தின் பின்னால் கிழக்கு நோக்கி ஈசனும், அம்பாளும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி கொடுக்கும் தரிசனம் காண கண் கோடி வேண்டும். இத்தலத்தில் சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.
🌹 இத்தலத்தில் உள்ள நவக்கிரக சன்னதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.
🌹 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலமும் இத்தலம் ஆகும்.
🌹 இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
கோயில் திருவிழா :
🌹 மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் மிகக் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
🌹 இத்தல தீர்த்தத்தில் ஞாயிறுதோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
🌹 இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமணத்தடை நீங்கும் தலமாக விளங்குகிறது. மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீர்க்கும் தலமாகவும் உள்ளது.
நேர்த்திக்கடன் :
🌹 பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்
பக்தியுடன்
மோகனா செல்வராஜ்