வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மத்திய பட்ஜெட்டில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வரும் 15, 16ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு என்று முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பொதுத்துறை வங்கிகளை இணைத்து, வங்கிச் சேவைகளின் பரவலாக்கத்தை முடக்கிய மத்திய அரசு, ஏற்கனவே ஐ.டி.பி.ஐ. வங்கிப் பங்குகளை விற்று தனியார்மயமாக்கியது போல, மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க முன்வந்துள்ளது என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஜன்தன் திட்டம் முதல் கல்விக் கடன், விவசாயக் கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பலவும் பொதுத்துறை வங்கிகளால் தான் நடைபெறுகின்றன.
அத்தகைய பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கி, கார்ப்பரேட் நலன் காக்கும் மோடி அரசின் செயல்பாடுகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்து மார்ச் 15, 16 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.