இந்த தேர்தலில் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றால், மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்தின் அதிமுக தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில், அவர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார்.
அவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தோப்பு வெங்கடாச்சலத்தை, அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பிற்கு பின், இவர் பெருந்துறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட காரணத்திற்காக என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பதாக உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட ஒருவர், தற்போது பெருந்துறை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது ஏன் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கட்சித் தலைமை பாரபட்சமான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இந்த செயல் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்காக முதல்வர், துணை முதல்வரை குறை சொல்ல எனக்கு மனதில்லை.
என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்காக, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் இருவரும் முதல்வருக்கு நெருக்கடி கொடுத்ததால் தான் நீக்கியுள்ளனர்.
மேலும் அவர் கூறுகையில், தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன். ஆனால், முதல்வராக பழனிசாமி நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றால், மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.