தேர்தல் செய்திகள்


வேளச்சேரி தொகுதி வேட்பாளரை தொடர்ந்து, அண்ணாநகர் மநீம வேட்பாளர் பொன்ராஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு கடந்த 18ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அண்ணாநகர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
______________________

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் மோகன்ராஜ் (67)  சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
________________________________
தஞ்சாவூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கமல்ஹாசன் சென்ற பிரசார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மறித்தனர்.
போலீசார் வாகனத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்காததால் கமல்ஹாசன் வாகனத்தை சிறிது நேரத்திற்கு பின்னர் அனுப்பி வைத்தனர்.
___________________
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதியளிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
_________________________
மதுராந்தகம் அடுத்த தச்சூரில் செயல்படும் அதிமுக முன்னாள் அமைச்சரின் கல்குவாரியை தடைசெய்யவேண்டும். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மதுராந்தகம் அடுத்த தச்சூரில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகனுக்கு சொந்தமான  கல்குவாரி  செயல்படுகிறது. 
இந்த குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி 10 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
______________________

அமைச்சர்கள்  போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சட்டவிரோத  நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்காளர்களுக்கு பணத்தை இணையதளம் மூலமாக கொடுப்பதாக தகவல் வெளியானது. 

இதைத் தொடர்ந்து இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் கொடுத்தார்.
___________________________
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை குப்பை கிடங்கில் உள்ள குப்பையை தரம் பிரித்து அதன் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இங்கு அதிகளவில் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடுவோம். மாடர்ன் தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்ற நடவடிக்கை எடுப்பேன். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
____________________
மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி போட்டியிடுகின்றார். இவர், நேற்று சோழவரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமனூர், பெருங்காவூர், அலமாதி போன்ற 12 பஞ்சாயத்துகளில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 
_____________________________