நகைகளை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
தங்கத்தின் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் பெண்கள் நகை வாங்குவதை விடுவதில்லை.
அதிகமான விலை கொடுத்து வாங்கும், அந்த நகைகளை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தங்கம்
நாம் தினமும் அணிந்து கொள்ளும் செயின், கம்மல், மூக்குத்தி போன்ற பொருட்களில் எளிதில் அழுக்குகள் படிந்து விடும். எனவே இவற்றை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது சுத்தமான சோப்பால் தேய்த்து தூய்மையான நீரில் சுத்தப்படுத்த வேண்டும்.
வெளியில் சென்றால் அல்லது விசேஷ வீடுகளுக்கு சென்றால் மட்டும் உபயோகப் படுத்தக்கூடிய ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை நாம் அலமாரியில் வைக்கும்போது ஒன்றோடு ஒன்று உரசாமல் வளையாமல் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டி தனித்தனியாக வைத்துக்கொள்வது நல்லது.
முக்கியமாக தங்க நகைகளை வைக்கும்போது அதனுடன் கவரிங் நகைகளை அதாவது பித்தளை நகைகளை சேர்த்து வைக்கவோ அல்லது அணியவோ கூடாது. அவ்வாறு அணிவது தங்க நகைகளை விரைவில் தேய்ந்து போக செய்துவிடும்.
முத்துக்கள்
பெண்களைப் பொறுத்தவரையில் முத்துக்கள், கற்கள் பதித்த நகைகளை தான் விரும்பி வாங்குவது உண்டு.
அவ்வாறு முத்துக்கள், கற்கள் பதித்த நகைகளை வாங்கும் போது நீரில் சுத்தம் செய்வது வழக்கம்.
அப்படி சுத்தம் செய்தால் அப்படிப்பட்ட நகைகளை மிகவும் அழுத்தி கழுவாமல், மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும்.
மேலும் முத்து கல் பதித்த நகைகள் மீது, வாசனை திரவியங்கள் பட்டால் அவற்றின் பொலிவு நாளடைவில் மங்கி போய் விடும். முத்துகள் பதித்த நகைகளை மற்றும் நகைகளோடு சேர்த்து வைக்கக் கூடாது.
அவ்வாறு வைத்தால் முத்துக்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே முத்துக்கள் பதித்த நகையை தனியாக வைத்துக் கொள்வது நல்லது
வெள்ளி
தங்க நகைகள் என்றில்லாமல், வெள்ளி பொருட்களையும் நாம் வாங்குவது உண்டு. தங்கத்திற்கு அடுத்தபடியாக பெண்கள் வாங்கக்கூடிய பொருட்கள் வெள்ளிப் பொருட்கள்.
இவற்றை இரும்பு பீரோவில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் வெள்ளி பொருட்கள் கறுத்துப் போகாமல் பளபளப்பாக இருக்கும்.
வெள்ளி கொலுசுகள் அல்லது எந்த வெள்ளி பொருளாக இருந்தாலும் அவற்றின் பளபளப்பு மங்கினால் சிறிதளவு பற்பசையை சேர்த்து சிறிது நேரம் ஊறிய பின் அதனை பல் துலக்கும் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் அதன் கறுப்பு தன்மை மாறி பளபளப்பாக மாறிவிடும்.
வெள்ளி ஆபரணங்களை அலமாரியில் வைக்கும்போது அந்த ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.
நன்றி.
மோகனா செல்வராஜ்