எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்
வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.
இன்றுபலரும் உணவை தவிர்ப்பதால் குடலில் அல்சர் அதாவது குடல் புண் ஏற்படுவதனால் வாயில் புண் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு வாழை இலையில் சாப்பிடும்போது வாய்ப்புண் குணமாகும்.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
அதுபோலவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உணவை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதை வாழை இலையில் பார்சல் செய்தால் அந்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.
தீக்காயம் ஏற்பட்டவர்கள் உடைக்கு பதிலாக வாழையிலை தான் பயன்படுத்தப்படுகிறது. தீக்காயம் ஏற்பட்ட பின் அவர்களை வாழை இலையின் மீது படுக்க வைப்பர். ஏனென்றால், வாழையிலையில் சூட்டின் தாக்கத்தை குறைக்கும் தன்மை அதிகமாக உள்ளது.
பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் படுக்கவைத்து, காலையில் சூரிய ஒளியில் காட்டினால், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். மேலும் காயம், தோல் புண்களுக்கு ஏற்படும் போது தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து, புண்மேல் தடவி, வாழை இலையை மேலே கட்டு கட்டி வைத்தால் புண்கள் விரைவில் குணமாகும்.
திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
நன்றி.
மோகனா செல்வராஜ்