திருநீற்றுப்பச்சிலை மூலிகையின் மருத்துவ குணங்கள்



முன்னோர்கள் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்திய மூலிகைகளை தான் அழகுக்கும் பயன்படுத்தினார்கள். அதனால் தான் பெண்கள் அதிக அழகுடன் முகத்தில் மாசு மருவில்லாமல் இருந்தார்கள். கொஞ்சம் உடலுக்கு கொஞ்சம் அழகுக்கு என்று பயன்படுத்திய அனைத்துமே உடலை மெருகேற்றி வைத்தது.

நவீன காலத்தில் உணவு முறைகளும் அதனால் அழகு குறித்த பிரச்சனைகளை சந்திப்பது அதிகமாகிவிட்டது. 

அதை சரிசெய்யவும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன் படுத்துவதன் மூலம் தற்காலிகமாக பிரச்சனை தீர்ந்தாலும் அவை பருக்கள் வந்த வடுக்கள் அல்லது தழும்புகளையும் உருவாக்குகிறது. அதை சரிசெய்ய மீண்டும் ஒரு கெமிக்கல் கலந்த க்ரீம்களை நாடுகிறார்கள். இதனால் இராசயனங்களின் தாக்கம் சருமத்தில் அதிகரித்துவருகிறது.

இயற்கை முறையில் அழகை பெறுபவர்களுக்கு தற்போதும் இயற்கை பொருள் நிறைந்த மூலிகை கைகொடுக்கவே செய்யும். அப்படியான மூலிகையில் ஒன்றுதான் திருநீற்று பச்சிலை.

பூக்களை தாண்டி இலையும் மணம் வீசும் அற்புத மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் இந்த திருநீற்று பச்சிலை பருக்களை மறைய வைப்பதோடு பருக்கள் இருந்த இடத்தில் வரும் தழும்பையும் மறைக்க செய்யும். 

பக்கவிளைவுகள் இல்லாத கெமிக்கல் இல்லாத இந்த மருந்து பருக்களை இல்லாமல் செய்துவிடக்கூடியது.

பருக்கள் குறைவாக இருக்கும் போது திருநீற்று பச்சிலையை அரைத்து அதன் சாறை பருக்களின் மீது பிழிந்து தடவி வர வேண்டும். அவை காய காய அதை தடவி வந்தால் பருக்கள் படிப்படியாக நீங்கும்.

நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும்.

காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். இதன் இலையை கசக்கி அதன்  சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும்.

இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்சனைகள் குணமாகும். திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று  சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
 
கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போதுஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். அதேபோல் இதன் விதையை  பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.
 
பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால்சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும். திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை  என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.
 
5 கிராம் விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல்,நீர் எரிச்சல், வெட்டை போன்றவை  சரியாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்