காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
தமிழக பீடாதிபதிகளில் முக்கியமாக திகழ்பவர் காஞ்சி சங்கர விஜயேந்திரர்.
இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் இராமேஸ்வரம் வந்திருந்தார். காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் ஈடுபட்ட அவர் இன்று காலை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்று அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.
இந்நிலையில், சுவாமி சன்னதிக்கு சென்ற விஜயேந்திரர் பூஜை செய்வதற்காக கருவறைக்கு செல்ல முயலும் போது ஏற்கனவே கருவறைக்குள் இருந்த பாரம்பரியமான மஹாராஸ்ட்டிர பிராமணர்கள் அவரை கருவறைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதன்பின் தமிழ் பிராமணருக்கும் - மஹாரஸ்ட்டிர பிராமணருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
பின்னர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விஜயேந்திரரை கருவறைக்குள் அனுமதிக்கப் பட்டதையடுத்து காஞ்சி விஜயேந்திரர் சிறப்பு தீபாராதனை செய்தார்.
பாரம்பரியத்தை காப்பதற்காக சுவாமி சன்னதி முன் கூச்சல் குழப்பம் நிலவியது, அங்கிருந்த பலரின் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியது.
சங்காராச்சாரியார் கோயில் கருவறைக்குள் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக சுவாமி சன்னதி கருவறைக்குள் கைங்கர்யம், குருக்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். திட்டமிட்டே இப்பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர் என்று சங்கராச்சாரியாருடன் வந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர்.