பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய விஐபிக்கள் நடமாட்டம் ரகசியமாக கண்காணிப்பு

 


பொள்ளாச்சி பாலியல் வழக்கில், விஐபிக்களின் நடமாட்டத்தை சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், இரண்டு ஆண்டுக்கு பிறகு கடந்த 6ம் தேதி பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அருளானந்தம், ஹேரன்பால், பாபு ஆகிய 3 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். 

இவர்களில், அருளானந்தம் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்தார். தற்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

அருளானந்தம் உள்பட மூவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்காக, இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ டிஎஸ்பி ஒருவர் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என 7 பேர் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி அரசு விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

இவர்கள் சாதாரண உடை அணிந்து, அதுவும் வாடகை கார்களில் பயணித்து செல்வதால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. 

அந்த அளவுக்கு, மிக கச்சிதமாக தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ பதிவின் அடிப்படையில், அந்த பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, தகவல் திரட்டுகின்றனர். 

வாக்குமூலமும் பெறுகின்றனர். இதனால், இவ்வழக்கில் இன்னும் சில தினங்களில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஐபிக்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் கண்காணிக்கப்படுவதால், ஆளும்கட்சியை சேர்ந்த பலர், பயம் காரணமாக, ஊரை காலி செய்துவிட்டு, வெளிமாவட்டங்களுக்கு சென்று விட்டனர். 

இதற்கிடையே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கும், அவருடன்  கைதான கூட்டாளிகளது வீட்டிற்கும் அடிக்கடி நேரில் சென்று விசாரணை  நடத்தி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை, வயிற்று வலி, குடும்ப பிரச்னை, வேலையில்லாத விரக்தி, குழந்தையில்லாத ஏக்கம் என பல காரணங்களை கூறி, உள்ளூர் போலீசார், வழக்கை முடித்து வைத்துவிட்டனர். 

இதையெல்லாம் தோண்டினால், இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்கிறார்கள் மாதர் சங்கத்தினர்.