இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்

மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.

1. திருமால் மார்பு

திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

2. பசுவின் பின்புறம்

பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.

3. யானையின் மத்தகம்

யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

4. தாமரை

மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.

5. திருவிளக்கு

விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.

6. சந்தனம்

மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.

7. தாம்பூலம்

தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.

8. கோமயம்

பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்.

9. கன்னிப்பெண்கள்

தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.

10. உள்ளங்கை

உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.

11. பசுமாட்டின் கால்தூசு

புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!

12. வேள்விப்புகை

வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.

13. சங்கு

சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.

14. வில்வமரம்

வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

15. நெல்லி மரம்

நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.

16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்.

17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்

18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

19. தானியக் குவியல்

20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்

21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்

22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்

23. நாவடக்கம் உள்ளவர்

24. மிதமாக உண்பவர்

25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்

26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.

"ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்