போராட்டத்தை போலீசார் தடுத்தால் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவர் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், 10.01.2021 இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் வார்டு சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தை தொடங்குன அடுத்த நாளே ஆளும்கட்சியான அதிமுக தடை விதித்தது.
இதனால் மக்கள் கிராம சபை என்று பெயர் மாற்றப்பட்டு, நடைபெற்று வருகிறது. எத்தனை தடை போட்டாலும், அதைமீறி நடத்துக்கூடிய சக்தி திமுகவிடம் உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தை போலீசார் தடுத்தால் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவர். ஆளுங்கட்சியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும் என்பதால் கோவையில் கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி திமுக போராட்டம் அறிவித்த நிலையில், கனிமொழி எம்.பி இன்று பொள்ளாச்சி சென்றார்.
அப்போது, எம்.பி. கனிமொழியை போலீசார் கோவையில் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தியதை கண்டித்து கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அருளானந்தத்தை அதிமுக காப்பாற்றியதற்கு காரணம் அவருக்கும் மேலே இருப்பவர்களை பாதுகாக்கத்தான்; பொள்ளாச்சி பாலியல் கொடூரக் குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.