சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு

 


சென்னை: திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. 

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். 

பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக தலைமைக்கு முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. 

51-வது ஆண்டுவிழா துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அந்த இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றோரையும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இவரது இந்தப் பேச்சு அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தேசியம் அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல ஆளுமை உள்ளதாகவும் குருமூர்த்தி கூறியிருக்கிறார். 

தேசியத்தை விரும்புகிறவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டதை தொடர்ந்தே குருமூர்த்தி இத்தகைய கருத்துக்களை கூறியுள்ளதாகவும், அவர் மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால் குருமூர்த்தியின் பேச்சு தொணியே வேறு மாதிரி அமைந்திருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை வைத்து கவனித்தால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பதை அறிய முடிகிறது.

இதன் காரணமாகவே சசிகலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுவெளியிலேயே அதிமுக தலைமைக்கு பகிரங்க கோரிக்கையை வைத்திருக்கிறார். 

குருமூர்த்தியின் கருத்தை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஏற்பார்களா என்பது தான் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.