தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வருகிற போது உறுதியோடு சொல்லுகிறேன் ‘நீட்’ தேர்வை உடனடியாக தமிழகத்திலிருந்து விலக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் கடைசி வரையில், அதில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றும் முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கக்கூடியவன் தான் இந்த ஸ்டாலின் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்.
விவசாயக் கடனை ரத்து செய்யுங்கள் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 4 மாதங்களில் ஆட்சிக்கு வரப் போகிறோம். அப்போது தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவைத் திமுக அரசு போடும் என்று நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வறுமையின் காரணமாக தங்களது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து அதற்கு வட்டிக்கு வட்டி கட்டும் சூழ்நிலை நிலவுகிறது. அதற்காக 5 சவரன் வரையிலான நகைக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சொன்னோம். இப்போதும் சொல்கிறோம்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர இருக்கிறோம். எப்படி விவசாயிகள் கடனை ரத்து செய்வோம் என்று சொன்னோமே அதுபோல இந்த ஐந்து சவரன் நகைக்கடன் பிரச்னைக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.